குடும்ப தகராறு காரணமாக மனைவியை மண்ணெண்ணை ஊற்றி தீப்பற்ற வைத்து கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

கணவன் - மனைவி இடையே பிரச்சினை

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, வ.உ.சி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ் என்பவரது மகள் 36 வயதான ஜெயலட்சுமி. இவருக்கு, மயிலாடுதுறை வில்லியநல்லூர் அக்ரஹாரத்தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது 44 வயதான பூராசாமி என்பவருக்கும் திருமணமாகியுள்ளது. இதனை தொடர்ந்து கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

மனைவி மீது தீ வைத்த கணவர்

இதன் காரணமாக ஜெயலட்சுமி கணவர் மீது கோபித்துக் கொண்டு, சீர்காழியில் உள்ள தனது தகப்பனார் வீட்டில் வசித்து கொண்டு, சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக தட்டச்சு பணியாளராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19.10.2015-ம் தேதி ஜெயலட்சுமி தான் பணிபுரியும் இடத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு வந்த அவரது கணவர் பூராசாமி ஜெயலட்சுமியின் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீப்பற்ற வைத்துள்ளார்.

மனைவி அளித்த மரண வாக்கு மூலம்

இதில் தீக்காயம்பட்ட ஜெயலட்சுமி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மேற்படி சம்பவம் தொடர்பாக ஜெயலட்சுமி அளித்த புகார் வாக்குமூலத்தின் பேரில் அவரது கணவர் பூராசாமி மீது சீர்காழி காவல் நிலையத்தில் கொலை முயற்சி மற்றும் வன்கொடுமைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் சீர்காழி காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் அழகுதுரை விசாரணை மேற்கொண்டு, ஜெயலட்சுமியின் கணவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இந்நிலையில் தீக்காயம்பட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஜெயலட்சுமி கடந்த 15.11.2015-ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கானது கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு சீர்காழி காவல் ஆய்வாளர் அழகுதுரை பூராசாமி மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணையானது மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு

இவ்வழக்கின் இறுதி விசாரணை நிறைவுற்ற நிலையில், வழக்கினை விசாரித்த மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி பூராசாமி குற்றவாளி என உறுதி செய்து, மேற்படி குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகையை கட்ட தவறும் பட்சத்தில் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனை அடுத்து குற்றவாளி பூராசாமியை கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

எஸ்.பி.பாராட்டு

இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராம.சேயோன் ஆஜராகி வாதாடினார். வழக்கினை தண்டனையில் முடிக்க சிறப்பாக பணியாற்றிய அரசு வழக்கறிஞர் ராம.சேயோன், சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் மற்றும் நீதிமன்ற அலுவல் புரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பாலச்சந்திரன் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். மேலும் இவ்வழக்கானது மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்த வழக்குகளில் நடப்பாண்டில் தண்டனையில் முடிவுற்ற 25வது வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.