விழுப்புரம்: காதலிக்கும், திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணுக்கு செலவு செய்ய தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை வளவனூர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

காதலிக்கு செலவு செய்ய வழிப்பறியில் ஈடுபட்ட காதலன்

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் விழுப்புரம் தாலுகா, வளவனூர் மற்றும் கண்டமங்கலம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரம் தனியாக இருந்த வயதான பெண்களை தாக்கி அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக ஐந்து கொள்ளை (Robbery) வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் எதிரிகளை கண்டறிய மாவட்ட காவல் கண்காணிப்பாள ப.சரவணன் அவர்கள் உத்தரவுப்படி காவல் ஆய்வாளர்கள் விஜயகுமார் மற்றும் செல்வநாயகம் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து எதிரிகளை தேடி வந்தனர்.

மூதாட்டிகளை குறி வைத்து வழிப்பறி

இந்நிலையில் கோலியனூர் அருகே வளவனூர் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை போலீசார் தடுத்து நிறுத்திய போது அந்த இளைஞர் நிற்காமல் தப்பி சென்றார். அவரை விரட்டி சென்று பிடித்து இளைஞரிடம் போலீசார் விசாரனை செய்தபோது வி.சாலையை பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (20) என்பதும் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர் என்பதும் அந்த இளைஞர் விழுப்புரம், கோலியனூர், வளவனூர், கண்டமங்கலம் உள்ளிட்ட இடங்களில் மூதாட்டிகளை குறி வைத்து வழிப்பறியில் ஈடுப்பட்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து இளைஞரிடம் போலீசார் விசாரணை செய்த போது காதலிக்காகவும், திருமணத்தை மீறிய உறவில் பெண்ணுடன் உள்ளதால் அவர்களுக்கு செலவு செய்ய வழிப்பறியில் ஈடுபட்டதை இளைஞர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கல்லூரி மாணவரை கைது செய்த போலீசார் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவர் வழிப்பறி சம்பவத்தில ஈடுப்பட்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.