மதுரை பந்தல்குடி கால்வாயில் குப்பை கழிவுகளை அகற்ற சென்ற நபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடலை இரண்டு மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்.

பாலத்தின்கீழே வெள்ளநீரில் பாண்டியராஜன் மூழ்கியுள்ளார்

மதுரை மாநகர் கோரிப்பாளையம் அருகேயுள்ள பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். கூலித் தொழிலாளியான இவர் தனது மனைவி சிவகாமி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் பந்தல்குடி பகுதியில் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டின் அருகேயுள்ள பந்தல்குடி கால்வாயில் மழை காரணமாக முழுவதுமாக நீர் நிரம்பி சென்றதால் அங்குள்ள பாலத்தின் கீழ் நீரில் அடித்து வரப்பட்ட குப்பைகள் முழுவதுமாக தேங்கியதால் நீர் செல்வதில் தடை ஏற்பட்டது. இதனால் மதியம் 3 மணியளவில் கூலித்தொழிலாளியான பாண்டியராஜன் மற்றும் அவரது நண்பர்கள் பந்தல்குடி கால்வாயில் அடைத்துக் கொண்டிருந்த குப்பைகளை அகற்றியுள்ளனர். அப்போது பாலத்தின் அடியில் இருந்த குப்பைகளை அகற்றிகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பாலத்தின்கீழே வெள்ளநீரில் பாண்டியராஜன் மூழ்கியுள்ளார்.

கால்வாயில் இருந்து வெளியேற்றினர்

இதனையடுத்து அருகில் இருந்த அவரது நண்பர்கள் பந்தல்குடி கால்வாயில் இறங்கி தேடினர். அப்போது பாண்டியராஜனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே தல்லாகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் பாண்டியராஜன் மூழ்கிய பகுதிகளில் மீட்பு பணியை தொடங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியை தாமதப்படுத்துவதாக கூறி நாங்களே கால்வாயில் இறங்கி மீட்கிறோம் என வாக்குவாதம் செய்து தீயணைப்புத் துறையினர் முன்பாக சிலர் சரசரவென கால்வாயில் குதித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை அறிவுறுத்தி கால்வாயில் இருந்து வெளியேற்றினர்.

2 மணி நேரமாக கயிற்றில் தொங்கியபடி தேடி வந்தனர்

இந்நிலையில் சிறிதுநேரம் கழித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியை தாமதப்படுத்துவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் திடீரென பந்தல்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஜேசிபி இயந்திரம் மூலமாக குப்பைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதையடுத்து தொடர்ந்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு பொதுமக்கள் கால்வாயின் அருகில் வராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டத்தையடுத்து தீயணைப்புத் துறையினரின் மேலும் ஒரு மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்ட பின்னர் பந்தல்குடி கால்வாயில் பாண்டியராஜன் மூழ்கிய பகுதிகளில் குப்பைகளை அகற்றியபடி 2 மணி நேரமாக கயிற்றில் தொங்கியபடி தேடி வந்தனர்.

மழைக் காலங்களிலாவது தூர்வார வேண்டும்

இதனைத்தொடர்ந்து பாலத்தின் அருகே தீயணைப்புத் துறையினர் தேடிய போது அருகிலேயே பாண்டியராஜன் நீருக்குள் மூழ்கி கிடந்த நிலையில் அவரது உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த போது அவர் மூச்சு திணறி உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் பாண்டியராஜனின் உடல் உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டது. மதுரை பந்தல்குடி பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் எந்த குப்பைகளை அகற்ற சென்ற கூலி தொழிலாளி பரிதாபமாக நீரில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு முறையாக கால்வாய்களை தூர்வாரி இருந்தால் இதுபோன்று குப்பைகளை அகற்றும் பணிகளில் பொதுமக்கள் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் எனவும் இனியாவது அரசு இதுபோன்ற நீர் நிலைகளை மழைக்காலங்களிலாவது தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். நீரில் சிக்கிய நபரை இரண்டு மணி நேரம் போராடி மீட்டு எடுத்துள்ளோம் என தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்தனர்.