மதுரையில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதிக்கு வந்தடைந்த வைகை நதிநீரை பூக்கள் தூவி வரவேற்ற மீனாட்சி அம்மன், கள்ளழகர் ,கருப்பசாமி.

சித்திரைத் திருவிழா 2025

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மாவட்டம் அழகர்மலை கள்ளழகர்கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 8ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக இன்று மாலை கள்ளழகர் தங்கபல்லக்கில் மதுரை மாநகர் நோக்கி புறப்பாடாகும் நிகழ்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளை கள்ளழகர் எதிர்சேவை நடைபெறும். இதனையடுத்து விழாவின் சிகர நிகழ்வாக 12 ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வானது நடைபெறும். இதற்காக வைகை அணையில் இருந்து நேற்று மாலை முதல் 12 ஆம் தேதி வரை வினாடிக்கு ஆயிரம் கன அடி நீரானது திறக்கப்பட்டதையடுத்து கள்ளழகர் எழுந்தருளும் பகுதியான மதுரை ஆழ்வார்புரம் பகுதிக்கு வைகை நதி நீர் வந்தடைந்தது.

சாமி வேடங்களில் வரவேற்பு

இதனை வரவேற்கும் விதமாக வைகை நதி மக்கள் இயக்கத்தின் சார்பில் மீனாட்சி அம்மன் மற்றும் கருப்பசாமி கள்ளழகர் வேடமிட்ட சிறுவர்கள் மற்றும் பக்தர்கள் பூக்களை தூவி வைகை நதி நீரினை வரவேற்றனர். அப்போது சிறப்பு பூஜைகள் செய்து வைகை நதி நீரை வரவேற்ற சிறுவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் வைகை நதி பாதுகாக்க வேண்டும் என முழக்கமிட்டபடி வரவேற்றனர். கையில் கிளியுடன் மீனாட்சி அம்மன் போன்று வேடம் அணிந்த சிறுமியும் கையில் அரிவாளுயுடன் கருப்பசாமி வேடமிட்ட சிறுவனும் கள்ளழகர் வேடமிட்ட முதியவரும் ஒரு சேற வைகையாற்றில் நின்றபடி வைகை நதி நீரினை வரவேற்றததை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். கள்ளழகர் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழந்தருளும் நிகழ்வு என்பது வைகையாற்று பகுதி அமைந்துள்ள தேனி, தேனூர், சிவகங்கை, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் என்பதால் ராமநாதபுரம் வரை வைகைநீர் சென்றடையும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

போற்றி பாதுகாக்க வேண்டும்

இது குறித்து பேசிய வைகை நதி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வைகை ராஜன்..,” கள்ளழகர் சித்திரைத் திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. இது போன்று வைகை நதியிலிருந்து தண்ணீர் வருவதை வரவேற்கும் விதமாக கடவுள் வேடமிட்ட குழந்தைகளும் முதியவர்களும் பூக்கள் தூவி வரவேற்றுள்ளோம், இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வைகை நதி என்பது புனிதமானது இதனை அனைவரும் போற்றி பாதுகாக்க வேண்டும் கழிவுகளை கலக்கக்கூடாது” என தெரிவித்தார்.