பள்ளி வளாகத்தில் மாணாக்கர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், கோடை கால சிறப்பு முகாம்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மதுரை மாவட்டத்திலுள்ள மழலையர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பிவைப்பு.

மதுரையில் சிறுமி பலி

மதுரை மாவட்டம் கே.கே நகர் பகுதியில் செயல்பட்டு வந்த ஸ்ரீ கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியில் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பு முகாமில் கலந்துகொண்டு நேற்று காலை பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயதான ஆருத்ரா என்ற சிறுமி பள்ளி வளாகத்தில் அலட்சியமாக திறந்து வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். இது தொடர்பாக பள்ளியில் வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி ஆய்வு மேற்கொண்ட பின்னர் பள்ளிக்கு சீல் வைத்தனர். சிறுமி உயிரிழந்தது தொடர்பாக அண்ணாநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் பள்ளி நிர்வாக பராமரிப்பு பணிகளின்போது அலட்சியமாக செயல்பட்டதாக பள்ளித் தாளாளர் திவ்யா மற்றும் உதவியாளர் வைரமணி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தப்பட்டனர். பின்னர் இருவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்ட நிலையில் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அறிக்கை

பள்ளி வளாகத்தில் சிறுமி உயிரிழப்பு சம்பவம் எதிரொலியாக நேற்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் : மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் மழலையர் பள்ளி உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளும் கோடை கால விடுமுறை நாட்களில் எவ்வித நிகழ்வுகளின் பெயரில் பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது. இதனை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்

சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ மழலையர் பள்ளி நிர்வாகம் அலட்சியமாக இருந்ததன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதால் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள மழலையர் பள்ளி உள்ளிட்ட அனைத்து வகையான பள்ளிகளிலும் மாணவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். கோடைகால சிறப்பு முகாம்கள் மற்றும் வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற உத்தரவை மீறினால் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை தபால் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.