வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58- ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகளுக்கு ஆதரவாக வர்த்தக சங்கத்தினர் 2000க்கும் அதிகமான கடைகளை அடைத்து முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உசிலம்பட்டி பகுதியில் மக்கள் போராட்டம்

வடக்கே வந்தலகுண்டு, தெற்கே விருதுநகர் மாவட்டம், கிழக்கே மதுரை மாநகர், மேற்கே தேனி மாவட்டம் என நான்கு மாவட்டத்திற்கும் மையமாக அமைந்துள்ளது, தான் உசிலம்பட்டி. ஊரும்.. அங்கு மக்கள் பேசும் பாசையும் தனித்துவமானது. பாசத்தைக் கூட அதிகாரமாக தான் காட்டுவார்கள். கலாச்சாரம், ஊர் திருவிழா எல்லாத்திலும் மண்வாசனை தூக்கலாக இருக்கும். ஆனால் இந்த மண்ணுக்கு ஜீவாதர பிரச்னை தற்போதுவரை தீரவில்லை. இந்நிலையில் இன்று இதற்காக உசிலம்பட்டி பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மதுரை உசிலம்பட்டியின் கனவு திட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாக விளங்கும் 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு வைகை அணையிலிருந்து சோதனை அடிப்படையில் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வரும் சூழலில், அணையில் உள்ள மதகு பகுதியை 67 அடியிலிருந்து 65 அடியாக குறைத்து நிரந்தரமாக தண்ணீர் திறக்க வேண்டும் என தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது வைகை அணை நிரம்பியுள்ள சூழலில் விரைவில் தண்ணீர் திறக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

2000 க்கும் அதிகமான கடைகளை அடைத்து போராட்டம்

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு ஆதரவாக உசிலம்பட்டி வர்த்தக சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜவுளிகடை பஜார், நகை கடை பஜார், ஐந்துகால் ராந்தல் பகுதி, வண்டிப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தேனி ரோடு, மதுரை ரோடு, பேரையூர் ரோடு என உசிலம்பட்டியின் முக்கிய பகுதிகளில் உள்ள 2000 க்கும் அதிகமான கடைகளை அடைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது. வைகை அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நிரந்தரமாக 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டக் களத்தில் அரசியல் கட்சிகள்

இதே போன்று விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., இ.மகேந்திரன் தலைமையிலான நிர்வாகிகளும், தவெக சார்பில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மகாலிங்கம் தலைமையிலான நிர்வாகிகள், அமமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வட் ப்ளாக், பாரதிய பார்வட் ப்ளாக், தமிழ் தேசிய பார்வட் ப்ளாக் என பல்வேறு பார்வட் ப்ளாக் கட்சியினர் மற்றும் மக்கள் அதிகார அமைப்பு, உசிலம்பட்டி வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் ஒன்றிணைந்து உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையிலிரிந்து பேரணியாக தேவர் சிலை வரை வந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.