மதுரை கோட்டத்தில் ரயில்கள் 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கம் பாதசாரிகள், கால்நடை வளர்ப்போர் கவனமாக இருக்க வேண்டுகோள்.

ரயில்கள் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும்

மதுரை கோட்டத்தில் ரயில்கள் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன. எனவே பாதசாரிகள் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் ரயில் பாதையை கவனமாக கடக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை ரயில் பாதை அருகே அணுகாமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உயிர் பலிகளை தவிர்க்கவும், ரயில்களை பாதுகாப்பாக இயக்கவும் முடியும். இந்த நிதியாண்டில் செப்டம்பர் மாதம் வரை பாதசாரிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கவனக் குறைவால் ரயில் பாதைகளில் 213 விபத்துக்கள் நடைபெற்றுள்ளன.

கால்நடைகள் உயிரிழப்பு

இதில் 116 பாதுசாரிகள் மற்றும் 97 கால்நடைகள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு ரயில்கள் மொத்தமாக சுமார் 14 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டுள்ளன. திருச்சி - மதுரை ரயில் பாதையில் அதிகமாக பாதசாரிகளும் திருச்சி - மானாமதுரை ரயில் பாதையில் அதிகமாக கால்நடைகளும் விபத்துகளில் சிக்கி உள்ளன. அனுமதி இல்லாத பகுதிகளில் ரயில் பாதையை கடப்பது இந்திய ரயில்வே சட்டம் பிரிவு 147 -ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே விபத்துகளை தவிர்க்க கடந்த அக்டோபர் 15 வரை ரயில்வே பாதுகாப்பு படையினர் அனுமதி இல்லாத பகுதியில் ரயில் பாதையை கடக்க முயன்ற 3,341 பேரை பிடித்து அவர்களுக்கு ரூபாய் 17.10 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளனர்.

விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

இதுகுறித்து இளைய சமுதாயத்தினருக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். அனுமதி இல்லாத பகுதிகளில் யாராவது ரயில் பாதையை கடந்தால் இது குறித்து பொதுமக்கள் அருகில் உள்ள ரயில் நிலைய அதிகாரிக்கோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 139 அல்லது 182 ஆகியவற்றிற்கோ தகவல் தெரிவித்து விபத்துகளை தவிர்க்க உதவலாம். விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம். ஆகவே அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் பாதுகாப்பாக ரயில் பாதைகளை கடந்து விபத்துக்களை தவிர்க்க உதவவும் என ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.