தமிழக வெற்றி கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், மதுரை பாரபத்தியில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், தவெக தொண்டர்கள் இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்ற முயற்சித்து வருகிறார்கள். அரசியல் கட்சி தொடங்கிய எவராக இருந்தாலும் மதுரையில் மாநாடு நடத்தி தோல்வியுற்றதாக சரித்திரம் இல்லை வரலாறும் தொடர்கிறது. திமுக, அதிமுக, விஜயகாந்தை தொடர்ந்து விஜய்யும் அதே பாணியை பின் தொடர்கிறார்.

மதுரையில் மாநாடு நடத்துவதன் மூலம் தென்தமிழக மக்களின் நம்பிக்கயை பெற முடியும். தென் தமிழகத்தில் பெரும்பான்மையான சமூக மக்களின் வாக்கு சதவீதமும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மதுரை மாநாடு விஜய்க்கு நம்பிக்கை அளிக்கும் என்றே அரசியல் விமர்சகர்கள் கணித்து வருகின்றனர். இதுவரை தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை வெளிப்படையாக தவெக தலைவர் விஜய் அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் நடத்தும் மதுரை மாநாட்டிற்கும் அஜித் ரசிகர்கள் பேனர் வைத்து அதகளம் செய்துள்ளனர். சினிமாவில் விஜய் - அஜித் படங்களுக்கு தான் போட்டி நிலவும். இருவருமே நண்பர்கள் என்றாலும் அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தாறுமாறாக சண்டை போடுவதுதான் காலம் காலமாக நீடித்து வருகிறது. இந்நிலையில் அஜித் நடித்த குட் பேட் அக்லி வசனத்தோடு தவெக மாநாட்டிற்கு வரவேற்பு அளித்துள்ளனர். தல வெறியன் தளபதி தொண்டன் என்ற வசனத்துடன், மதுரை மாநாடு எதிர்கால தமிழ்நாடு போன்ற வசனங்கள் அந்த பேனரில் இடம்பிடித்துள்ளது. இதைப்பார்த்து விஜய் தொண்டர்களும் குதூகலமடைந்துள்ளனர். மதுரை மாநகரமே தவெக கொடியால் நிரம்பி கிடக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.