கள்ளழகர் எதிர்சேவையின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்திகோஷங்கள் எழுப்பியபடி தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி கள்ளழகரை வரவேற்றுவருகின்றனர்.

கள்ளழகர் சித்திரைத் திருவிழா

திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என புகழ்ந்து அழைக்கப்படுவது. 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானதுமான மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலின் சித்திரைத் திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று மாலை சுந்தராஜபெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக தங்கப்பல்லக்கில் அழகர்மலையிலிருந்து நேற்று மாலை மதுரையை நோக்கி புறப்பாடாகினார். பின்னர் அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, வழியாக வந்த கள்ளழகர் மதுரை மாநகர் பகுதியான மூன்றுமாவடி பகுதிக்கு கண்டாங்கி பட்டுடுத்தி தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு பிரமாண்டமாக எதிர்சேவை நடைபெற்றது. தொடர்ந்து புதூர் மற்றும் டி.ஆர்.ஓ., காலனி, ரிசர்வ் லைன் ரேஸ்கோர்ஸ் காலனி வழியாக சென்று மாலை அவுட் போஸ்டில் எழுந்தருளுவார். எதிர்சேவையின் போது பக்தர்கள் கருப்பசாமி வேடமிட்டு ஆடல்பாடல்களுடன் வரவேற்றுவருகின்றனர்.

தண்ணீரை பீய்ச்சி வரவேற்பு

பெண்கள் கையில் சர்க்கரை தீபம் ஏந்தியபடி கள்ளழகரை வரவேற்பர். மேலும் கள்ளழகர் முன்பாக பல்வேறு இசை வாத்தியங்கள் முழுங்கவும், கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியபடியும் கருப்பசாமி வேடமி்ட்ட பக்தர்கள், அனுமர் வேடமிட்டும் கள்ளழர் எதிர்சேவையின் போது வருகை, மாநகர் பகுதிக்குள் நுழைந்த கள்ளழகரை மனம் குளிர்வித்து வரவேற்கும் வகையில் தோல்பைகளால் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றுவருகின்றனர். வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிய கள்ளழகர் எதிர்சேவையும் நடைபெற்றது.

கோவிந்தா கோவிந்தா கோஷம்

அழகர்கோவில் புறப்பாடு முதல் மீண்டும் கோயிலுக்கு திரும்பும் வரை சுமார் 480க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். இதனை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதியில் 5ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை மாநகரில். கள்ளழகர் எதிர்சேவையை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், சிசிடிவி கேமிராக்கள் அமைத்தும் பாதுகாப்பு பணிகளை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று இரவு தல்லாகுளம் அம்பலகார மண்டகப்படியில் எழுந்தருளும் கள்ளழகர் நள்ளிரவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார். பின்னர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஏற்று ஆயிரம்பொன் சப்பரத்தில் காட்சியளிப்பார். அதனை தொடர்ந்து தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடாகி நாளை அதிகாலை வெள்ளி குதிரை வாகனத்தில் வீர ராகவ பெருமாள் வரவேற்க கள்ளழகர் வைகையாற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் எழுந்தருளவுள்ளார். இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. கள்ளழகர் எதிர்சேவையின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்திகோஷங்கள் எழுப்பியபடி தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி கள்ளழகரை வரவேற்று வருகின்றனர்.