மதுரையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தில் அம்மன் சுவாமி தேர்கள், இரும்பாலான புதிய சக்கரங்களில் மாசி வீதிகளில் வலம் வர உள்ளன. திருச்சி பெல் நிறுவனத்தால் இந்த சக்கரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயில்

மதுரையில் உள்ள மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் உள்ளூர் முதல் வெளிநாடு வரையிலான லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம். இத்தகைய மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மீனாட்சி திருக்கல்யாணம் பட்டாபிஷேகம் என களைகட்ட உள்ள இந்த திருவிழாவில், ஏப்ரல் 29ஆம் தேதி அம்மன் சுவாமி தேர்கள் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வகையில் திருத்தேரோட்ட நிகழ்வு நடைபெற உள்ளது.

தேர்கள் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்படுவது வழக்கம்.

லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் தேரோட்ட உற்சவத்தில் சாதி, சமய வேறுபாடுகள் கடந்து அனைத்து மக்களும் வடம் பிடித்து இழுத்து மகிழ்வது வழக்கமான ஒன்று. இன்னும் சில நாட்களே உள்ள இந்த திருவிழாவிற்கான பணிகள் தற்போது முழு விச்சில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கீழமாசி வீதி தேர் முட்டியில் அமைந்துள்ள 2 தேர்கள், கூரை பிரிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு சில நாட்களில் தோரணங்கள் கட்டும் பணி துவங்கும். இங்குள்ள தேரடி கருப்பணசாமி கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டு பிறகு தான் தேர்கள் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்படுவது வழக்கம்.

மாசி வீதிகளில் உருண்டோட தயாராக உள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டு அம்மன் சுவாமி இரண்டு தேர்களின் சக்கரங்கள் மாற்றப்பட்டு புதிய சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே இரும்புச் சக்கரங்களை உருவாக்கும் பணியை மேற்கொண்டு வந்தது. தற்போது இரண்டு தேர்களுக்கும் நான்கு சக்கரங்கள் புதிதாக பொருத்தப்பட்டு மாசி வீதிகளில் உருண்டோட தயாராக உள்ளன. 19-ம் தேதியிலிருந்து மீனாட்சி - சுந்தரேசுவரர் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். ஏப் 26-ஆம் தேதி அன்று மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 27-ஆம் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது.

மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

இவ்விழாவில் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் ஏப் -28 ஆம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும். திருக்கல்யாண விழாவில் அன்று இரவு மீனாட்சி அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். திருக்கல்யாணத்திற்கு மறுநாள் 29 ஆம் தேதி மாசி வீதிகளில் சுவாமி - அம்பாள் காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது விழா ஏற்பாடை கோயில் நிர்வாகம் செய்து வருவது குறிப்பிடதக்கது.