மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் உறுதி செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிக்கை

மதுரை மாநகராட்சி ஆணையாளர், மதுரை மாநகர் காவல்துறை கண்காணிப்பாளருக்கு, சித்திரைத் திருவிழா கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள கோரிக்கை.

சித்திரைத் திருவிழா

அதில்..," மதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் மே 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கள்ளழகர் கோயிலில் இருந்து புறப்பட்டு, பல்வேறு மண்டகப்படிகள் வழியாக நகரை அடைந்து, தல்லாகுளம் பெருமாள் கோயிலில் எழுந்தருளி, அங்கிருந்து தங்கக் குதிரையில் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த வைபவத்தை காண தென் மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரை நகருக்கு வருகை தரவுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்காக கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுகிறோம்.

கூட்டம் அதிகமாக கூடும் பகுதிகளில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்.

குறிப்பாக தல்லாகுளம், கோரிப்பாளையம், ஆழ்வார்புரம், ராமராயர் மண்டகப்படி, அண்ணாநகர், வண்டியூர், தெப்பக்குளம், நெல்பேட்டை, சிம்மக்கல், தைக்கால், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும். ஆம்புலன்ஸ் மற்றும் அவசர மருத்துவ சேவைகள் போதுமான அளவில் நிறுத்தப்பட வேண்டும். வைகை ஆற்றுப் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்படையினரை ஆற்றுப் பகுதியில் பணியில் ஈடுபடுத்த வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் வைகை ஆற்றில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

குடிநீர் வசதி போதுமான அளவில் ஏற்படுத்த வேண்டும்

நகரில் குப்பைகள் தேங்கும் இடங்களில் அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு குடிநீர் வசதி போதுமான அளவில் ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கிருமி நாசினி மருந்துகள் தெளித்தலும், ப்ளீச்சிங் பவுடர் அதிகமாகப் பயன்படுத்தலும் மேற்கொள்ள வேண்டும். கோரிப்பாளையம் புதிய மேம்பாலம் மற்றும் செல்லூர்–கோரிப்பாளையம் இணைப்பு மேம்பால பணிகள் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேற்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், பக்தர்கள் பாதுகாப்பாகவும் சீருடனும் திருவிழாவில் கலந்து கொள்ள முடியும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மாநகர் மாவட்ட குழு சார்பில் மாவட்ட செயலாளர் மா. கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.