"மணிமங்கலம் இராஜகோபால சுவாமி திருக்கோயிலுக்கு 28 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், கும்பாபிஷேகம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது."

அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் - Manimangalam Rajagopala Swamy Temple

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்துள்ள மணிமங்கலத்தில் உள்ள பழமையான அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயிலுக்கு இம்மாதம் 28 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானதாகும்.

மகாபாரதத்தில் வலது கரத்தில் சங்கினை ஏந்தி எதிரிகளை நடுங்கச்செய்த கிருஷ்ணபரமாத்மா பஞ்சபாண்டவர்களின் வேண்டுதல்படி, அதேகோலத்தில் வலது கரத்தில் சங்கும் இடது கரத்தினில் சக்கராயுதமும் தாங்கி இராஜகோபால சுவாமி எனும் திருப்பெயருடன் இத்தலத்தில் பாண்டவர்களுக்குக் காட்சியளித்து அருள்பாலித்து வருவது இத்திருக்கோயிலுக்குரிய தனிச்சிறப்பாகும்.

27 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்

பல்லவ மன்னர்களாலும் சோழ மன்னர்களாலும் இத்திருக்கோயில் கட்டப்பெற்றுள்ளது. பழமையான இத்திருக்கோயிலுக்கு 27ஆண்டுகளுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனால் இத்திருக்கோயிலைப் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்து தருமாறு மணிமங்கலம் கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதனையேற்று இத்திருக்கோயிலைப் புனரமைக்க ரூ.70 லட்சம் ஆணையர் பொதுநல நிதியை இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கியது. அந்த நிதியுடன் உபயதாரர் பங்களிப்பும் சேர்த்து சுமார் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் மூலவர் இராஜகோபால சுவாமி, செங்கமலவல்லி தாயார், ஆண்டாள், கருடன் சந்நிதிகள் புதுப்பிக்கப்பட்டு பிரகாரத்தில் கருங்கல் தரைதளம் அமைக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகம் தேதி மற்றும் நேரம்:

அனைத்து திருப்பணிகளும் நிறைவு பெற்றுள்ளதால் வரும் 28 ஆம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்குமேல் 10.15 மணிக்குள் இத்திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேகத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுவதால் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள ஏதுவாக குன்றத்தூர் துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் தலைமையில் அனைத்து துறை ஆலோசனைக் கூட்டம் திருக்கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், மணிமங்கலம் ஊராட்சி தலைவர் இரா.ஐயப்பன், அறநிலையத்துறை வாலாஜாபாத் ஆய்வர் சிவராமகிருஷ்ணன், காவல் துணை ஆய்வாளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி மற்றும் தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, மின்சார துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடங்கிய கும்பாபிஷேக பணிகள்

இதில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் வசதி, சுகாரதார வசதி, மருத்துவ வசதிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சனிக்கிழமை மாலையில் அங்குரார்ப்பணம், சுதர்சன யாகம், திவ்யபிரபந்த சேவை, யாகசாலை பிரவேசம், யாகசாலை ஆராதனை பூஜைகள் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து காலை மாலை என மூன்று நாட்கள் யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன. ஞாயிறு, திங்கட்கிழமைகளில் சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றப்படுகிறது. விழாவினை முன்னிட்டு கோயில் விமானங்களுக்கு அமைக்கப்பட்டுள்ள சவுக்கு சாரங்கள், மின்விளக்கு அலங்காரங்கள், பக்தர்களுக்கான வசதிகள் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் உதவி ஆணையர் ஆர்.கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் திரு.சி.குமரதுரை அவர்கள் அறிவுரையின்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், பரம்பரை அறங்காவலர் சம்பத்குமார் ஆகியோர் செய்துள்ளனர்.