தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு மற்றும் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா இன்று எழுச்சியுடன் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய், தற்போதைய அரசியல் சூழல், ஆளுங்கட்சியின் விமர்சனங்கள் மற்றும் 2026 தேர்தல் இலக்கு குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

மக்களின் கண்ணீரைத் துடைக்க வந்த இயக்கம்

தமது உரையைத் தொடங்கிய விஜய், 1977-ம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் எத்தகைய சூழலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினாரோ, அதேபோன்ற ஒரு அரசியல் வெற்றிடமும் தேவையும்தான் த.வெ.க உருவாவதற்கும் காரணம் என்றார். காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற மாபெரும் தலைவர்கள் அமர்ந்த இடத்தில், தகுதியற்றவர்கள் அமர்ந்திருப்பதைப் பார்த்து மக்கள் வடித்த கண்ணீரைத் துடைக்கவே தமிழக வெற்றிக் கழகம் உதயமானது என்று அவர் உணர்ச்சிபொங்கக் குறிப்பிட்டார்.

அனுபவம் பேசும் "பழைய ஆயுதங்கள்"

தமக்கு அரசியல் அனுபவம் இல்லை என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்த விஜய், "எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோதும் இதே 'அனுபவ'ப் பேச்சைத்தான் எதிரிகள் கையாண்டார்கள். அவர் ஒரு நடிகர் என்றும், 'அட்டக்கத்தி' வீரன் என்றும் கேலி செய்தார்கள். ஆனால் மக்கள் அவருக்கு மகத்தான வெற்றியைத் தந்தார்கள். 1977-ல் கையாண்ட அதே துருப்பிடித்த ஆயுதங்களை இப்போதும் திமுக கையிலெடுக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட உலகில் உங்கள் உத்திகளையும் கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள் பாஸ்!" என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். மேலும், காமராஜர் போன்ற தலைவர்களையே சிறுமைப்படுத்திய மரபு இவர்களுடையது என்றும் சாடினார்.

"ஊழல் முதற்றே உலகு"

ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த விஜய், இன்றைய டிஜிட்டல் உலகில் திருவள்ளுவர் இருந்தால், "அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு" என்றுதான் திருக்குறள் எழுதியிருப்பார் என விமர்சித்தார். "பவள விழா பாப்பா" என்று திமுகவைச் சாடிய அவர், மக்களின் உண்மையான பிரதிநிதியாக நின்று ஊழல்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம் என்றும், தமக்கு இருக்கும் 'தில்' வேறு யாருக்கும் இல்லை என்றும் முழங்கினார்.

விசில் சின்னமும் தேர்தல் வியூகமும்

2026 சட்டமன்றத் தேர்தலே த.வெ.க-வின் இலக்கு என்பதைத் தெளிவுபடுத்திய அவர், ஊடகங்களில் விவாதிக்கப்படும் மும்முனை, நான்கு முனைப் போட்டிகளைப் பற்றித் தமக்குக் கவலையில்லை என்றார். "ஒரு பக்கம் திமுக கூட்டணி, ஒரு பக்கம் பாஜக கூட்டணி. ஆனால் மறுபக்கம் மாபெரும் மக்கள் சக்தியாக நாம் நிற்கிறோம். திமுகவை வீழ்த்த நம்மால் மட்டும்தான் முடியும்," என்று நம்பிக்கை தெரிவித்தார். வாக்குப்பதிவு அன்று ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் 'விஜய்'களும் 'விஜி'களும் வாக்குச்சாவடியில் திரளும்போது எதிரிகளுக்குத் தங்களின் பலம் புரியும் என்றார்.

மக்களின் டாப் இன்ஜின் த.வெ.க

சமீபத்திய கருத்துக்கணிப்புகள் சிலரது 'கடுப்பில்' எடுக்கப்பட்டவை என்று விமர்சித்த விஜய், தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் 'விசில்' சின்னம் சென்றடைந்துவிட்டது என்றார். "பழைய இன்ஜின், ஓட்டை இன்ஜின் என எது வந்தாலும், மக்கள் அங்கீகரித்த 'டாப் இன்ஜின்' நமது கழகம்தான். தமிழக அரசியலின் 'விசில் புளோயர்' (Whistleblower) நாம்தான். 2026-ல் கோட்டையில் த.வெ.க ஆளுங்கட்சியாக அமரும்," என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.