தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்த கலியபெருமாள் மகன் மோகன்தாஸ். இவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த காசிநாதன் மகன் சிதம்பரம் 72. தற்போது சென்னை, மயிலாப்பூரில் வசித்து வருகிறார். ஒரே ஊர் என்பதால், கடந்த 2014ம் ஆண்டு முதல் சிதம்பரத்திற்கும், மோகன்தாஸ்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, மோகன்தாஸ் தன்னை ஒரு அரசியல் புள்ளி எனவும், எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு என்னை நன்கு தெரியும், அமைச்சர் ஒருவரிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக, சிதம்பரத்திடம், அவரது மகனுக்கு, உதவி செய்து மக்கள் தொடர்பு அதிகாரி வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும், அமைச்சர்கள் உள்ளிட்ட பலருக்கு பணம் கொடுக்க வேண்டும், வேலை கிடைக்காக விட்டால் பணத்தை திருப்பி தந்து விடுவதாக மோகன்தாஸ் கூறியுள்ளார்.

இதை உண்மை என சிதம்பரம் நம்பி, கடந்த 2014ம் மார்ச் ஆண்டு 2017ம் ஆண்டு ஜூன் வரை பல தவனையாக, 98 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். மேலும், 2015ம் ஆண்டு நவம்பர் முதல் 2017ம் ஆண்டு ஏப்ரல் வரை, மோகன்தாஸ் அரசியல் செயல்பாட்டிற்காக பணம் வேண்டும் என கடனாக கேட்டதால் சிதம்பரம் 65 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.

ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட மோகன்தாஸ், கடந்த 2018ம் ஆண்டு வரை சிதம்பரம் மகனுக்கு வேலை, வாங்கித்தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இது தொடர்பாக சிதம்பரம், மோகன்தாசிடம் தான் வழங்கிய பணத்தை திரும்பி கேட்டுள்ளார்.

இருப்பினும், மோகன்தாஸ், சிதம்பரத்திடம், ரூ.20 லட்சம் கொடுத்தால், வேலை வாங்கி விடலாம் என கூறியுள்ளார். அப்போது, சிதம்பரம் அவருக்கு சொந்தமான வீட்டினை, மோகன்தாஸ் பெயரில் கிரையம் செய்துக்கொடுத்து, ஒப்பந்தம் பத்திரம் போட்டுள்ளார். இதற்கு 20 லட்சம் ரூபாயை, மோகன்தாஸ் சிதம்பரத்திற்காக, வங்கியில் இருந்து வழங்குவது போல, வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜன.7ம் தேதி, 20 லட்சம் ரூபாயை, சிதம்பரம் தனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட 20 லட்சம் ரூபாயில், 19.50 லட்சம் ரூபாய், மோகன்தாஸ் வங்கி கணக்கிலும், 50 ஆயிரம் ரூபாயை நேரடியாகவும் வழங்கியுள்ளார்.

இதன் பிறகு, 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில், 1.63 கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டதற்கான, ஒப்பந்த பத்திரத்தையும், 9 காசோலைகளையும், மோகன்தாஸ் சிதம்பரத்திடம் வழங்கியுள்ளார். ஆனால், மோகன்தாஸ் வழங்கிய காசோலைகள் வங்கியில் பணம் இல்லை என திரும்பி வந்துவிட்டது.

இதுகுறித்து சிதம்பரம் பலமுறை மோகன்தாஸ்சிடம் கேட்ட போது, பணத்தையும் தர முடியாது. வீட்டையும் தர முடியாது என கூறி மிரட்டியுள்ளார். இது குறித்து சிதம்பரம் கடந்த 2025 பிப். 21ம் தேதி, எஸ்.பி., அலுவலகத்தில் மோகன்தாஸ் மீது புகார் அளித்தார்.

இந்த புகார்மீது கடந்த மார்ச் 14ம் தேதி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், மோகன்தாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இது தொடர்பாக, கடந்த 20ம் தேதி போலீசார், அவரது கடைக்கு சென்று சம்மன் நோட்டீஸ் வழங்க சென்றனர். ஆனால், பணம் கேட்டு போலீசார் தன்னை தாக்கியதாக தன்னை தானே காயப்படுத்திக்கொண்டு, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மோகன்தாஸ் சேர்ந்தார். இருப்பினும், போலீசார் மோகன்தாசை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.