புதுச்சேரி: கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் முக்கிய நபர்கள் இருவரை சைபர்கிரைம் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இரண்டு நடிகைகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர், பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற ஊழியர் அசோகன் (70). இவரை கடந்த 2023-ம் ஆண்டு தொடர்பு கொண்ட மர்ம நபர், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை நம்பி, ஆஷ்பே என்ற இணையதள பக்கத்தில் அசோகன் ரூ. 98 லட்சம் முதலீடு செய்தார்.

அதன் மூலம் லாபத்தை சேர்த்து ரூபாய். 2.5 கோடி மதிப்பிலான கிரிப்டோ கரன்சி இருந்த நிலையில், அதை விற்று பணமாக தனது வங்கிக்கணக்குக்கு மாற்ற அசோகன் முயற்சித்தபோது, இணையதள பக்கம் முடக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அசோகன் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்தார். இதுகுறித்து அவர் புதுச்சேரி சைபர்கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், புதுச்சேரியைச் சேர்ந்த 9 பேர் ஆஷ்பேவில் முதலீடு செய்து ரூ. 2.50 கோடியை இழந்துள்ளதும், இந்தியா முழுவதும் ரூ. 100 கோடிக்கு மேல் பொதுமக்களிடம் இருந்து வசூல் செய்து ஒரே நாளில் கிரிப்டோ கரன்சியை மதிப்பில்லாமல் செய்து பணத்தை மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன் தலைமையிலான தனிப்படை குழுவினர் கோயம்புத்துாரை சேர்ந்த நித்தீஷ்குமார் ஜெயின் (36), அரவிந்த்குமார் (40), ஆஷ்பே என்ற இணையதளத்தை உருவாக்கிய தாமோதரன் (52), மூளையாக செயல்பட்ட கோயம்புத்தூரைச் சேர்ந்த அலுமினிய பொருட்கள் தயாரிப்பு நிறுவன இயக்குநர் சையது உஸ்மான் (51) ஆகியோரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.2 கோடி மதிப்பிலான இரண்டு கார்கள், செல்போன், லேப்டாப், ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய தொழிலதிபரான கோயம்புத்தூர் சாய்பாபா காலனி கே.கே.புரம் பகுதியைச் சேர்ந்த இம்ரான் பாஷா (37) என்பவரையும் புதுச்சேரி சைபர்கிரைம் தனிப்படை போலீஸார் பெங்களூருவில் கைது செய்தனர். பின்னர் அவரை புதுச்சேரி அழைத்து வந்த போலீஸார் விசாரணை நடத்தினர்.

போலீசார், விசாரணையில், நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பிரபலங்கள் மூலம் கடந்த 2021-ல் 'ஆஷ்பே' நிறுவனம் தொடங்கப்பட்டது. இதற்காக தமன்னாவுக்கு ரூ.34 லட்சமும், காஜல் அகர்வாலுக்கு ரூ.28 லட்சமும் மோசடி செய்யப்பட்ட மக்கள் பணத்தில் இருந்து வழங்கியது தெரியவந்தாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய நபர்களான இம்ரான் பாஷா, பாபு (எ) சையது உஸ்மான் ஆகிய இருவரையும் சைபர்கிரைம் போலீஸார் நீதிமன்ற உத்தரவின் பேரில் 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழுமையான விசாரணைக்கு பிறகு மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்றும், இந்த வழக்கு சம்பந்தமாக நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சைபர்கிரைம் போலீஸார் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய நபராகவும், மூளையாகவும் செயல்பட்ட துபாயைச் சேர்ந்த நபரை கைது செய்யும் நடவடிக்கை எடுத்து வருவதாக சைபர்கிரைம் போலீசார் தெரிவித்தனர்.