தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் போலி ஆதார் மற்றும் பான் கார்டு தயாரித்தவரை போலீஸார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் ஏராளமான நிறுவனங்கள், வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தயாரித்து கொடுப்பதாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றுள்ளன.

இதுபற்றி விசாரணை நடத்த தனிப்பிரிவு போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் உத்தரவிட்டார். அதன்படி இன்று தனிப்பிரிவு போலீஸார் மேலக்காவேரி அய்யனார் கோயில் யானையடித் தெருவில் அப்துல்காதர் (31) என்பவருக்கு சொந்தமான கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று திடீரென சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் சில சான்றிதழ்கள் இருந்துள்ளன. இதனால் தனிப்பிரிவு போலீஸார் அப்துல் காதரை விசாரணைக்காக காரில் தஞ்சாவூர் அழைத்து வந்தனர். மேலும் கம்ப்யூட்டர் சென்டரில் இருந்த கணினி, பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றையும், அங்கிருந்த ஆதார் கார்டுகள், பான் கார்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அப்துல்காதரிடம் கும்பகோணம் கிழக்கு போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் போலியாக ஆதார், பான் கார்டுகளை தயாரித்து, கும்பகோணத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவருக்கு கொடுத்ததாக தெரியவந்தது. இதையடுத்து அப்துல்காதரை கைது செய்த போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.