MP Durai Vaiko: போரின் கோரப்பிடியில் சிக்கி, உயிர்பயத்தில் உறைந்த ஒரு இந்திய மாணவன் துரை வைகோவின் முயற்சியா தாயகம் திரும்பியுள்ளார்.

மீட்கப்பட்ட இந்திய மாணவன்

பல கனவுகளுடன் ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவன் கிஷோர் சரவணன், உக்ரைன் - ரஷ்ய போர் முனையில் எதிர்பாராத விதமாக ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த மாணவன், திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை வைகோவின் பெரும் முயற்சிக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசுடனும், வெளியுறவுத் துறை அதிகாரிகளுடனும், ரஷ்ய மற்றும் உக்ரைன் தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தை, தொடர் முயற்சியின் விளைவாக, ஒரு தாயின் பிரார்த்தனைக்கும், கண்ணீருக்கும் பதிலளிக்கும் விதமாக மாணவன் தாயகம் திரும்பியுள்ளார்.

போரின் பிடியில் சிக்கிய இந்திய மாணவன்

மாணவன் மீட்கப்பட்டது குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த கிஷோர் என்ற மாணவர் ரஷ்யாவில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார். அவரை வலுக்கட்டாயமாக அந்நாட்டு ராணுவம் உக்ரைன் போரில் ஈடுபடுத்தியது. துப்பாக்கியுடன் போர் முனையில் சிக்கித் தவித்த அந்த மாணவர், தனது பெற்றோரிடம் பேசி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி அழுதுள்ளார்.
இதை அவரது பெற்றோர் என்னிடம் தெரிவித்ததை தொடர்ந்து, நான் உடனடியாக மத்திய வெளியுறவு அமைச்சர், பிரதமரை ஆகியோரை சந்தித்து மாணவரை மீட்க வலியுறுத்தினேன்.

மாணவனின் மருத்துவ கனவு

இதன் தொடர்ச்சியாக, தற்போது கிஷோர் போர் முனையிலிருந்து மீட்கப்பட்டு, ரஷ்ய நாட்டின் மருத்துவ கல்லூரியில் படிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மருத்துவ படிப்பு தொடர்பான ஆவணங்கள் பரிமாற்றம் முடிந்த பிறகு தமிழகத்துக்கு திரும்ப இருக்கிறார். மாணவரை மீட்க உதவிய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
இவர் தவிர, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன்ராஜ், மதன்ராஜ், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வெற்றிசெல்வன் ஆகிய 3 இளைஞர்களும் வேலைக்காக மியான்மர் நாட்டுக்குச் சென்ற இடத்தில் இணையதள மோசடி பணியில் ஈடுபட வலியுறுத்தப்பட்டுள்ளனர். எனது முயற்சியால் அவர்களும் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்” என துரை வைகோ தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின்போது உடனிருந்த கிஷோரின் தந்தை சரவணன், தாய் பாமா உள்ளிட்டோர் துரை வைகோ எம்.பி.க்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.