கோவை: பொள்ளாச்சியில் பல்லடம் சாலை மற்றும் உடுமலை சாலையை இணைக்கும் வகையில் திட்ட சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, இந்த சாலை பணிக்காக ரூ.32 கோடி மதிப்புள்ள இடத்தை ஜெயராமன் குடும்பத்தினர் தானமாக வழங்கினர் .

சாலை பணிக்காக ரூ.32 கோடி மதிப்புள்ள இடத்தை தந்த குடும்பத்தினர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சாலை அமைப்பதற்காக ரூ.32 கோடி மதிப்புள்ள 80 சென்ட் இடத்தை ஒரு குடும்பத்தினர் நகராட்சிக்கு தானமாக வழங்கியுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பல்லடம் சாலை மற்றும் உடுமலை சாலையை இணைக்கும் வகையில் திட்ட சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நகராட்சி சார்பில் கடந்த 2009-ல் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது.

பொள்ளாச்சியில் பல்லடம் சாலை...

இணைப்பு சாலை அமையும் வழியில் சாந்தா ஜெயராமன் என்பவரது குடும்பத்துக்கு சொந்தமாக 80 சென்ட் இடம் உள்ளது. இந்த நிலத்தை கையகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாந்தா ஜெயராமன் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சி ஆணையராக கணேசன் பொறுப்பேற்றதும், சாந்தா ஜெயராமன் குடும்பத்தினருடன் பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பொள்ளாச்சி நகர மக்களின் நலன் கருதி 66 அடி அகலத்தில் சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படும் இணைப்பு சாலை முழுமை பெற சாந்தா ஜெயராமன் குடும்பத்தினர் இடம் வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதை ஏற்று, ரூ.32 கோடி மதிப்புள்ள 80 சென்ட் நிலத்தை சாந்தா ஜெயராமன் குடும்பத்தினர் பொள்ளாச்சி நகராட்சிக்கு தானமாக கொடுக்க முன்வந்தனர். ஏற்கெனவே இந்த நிலத்துக்கு நகராட்சி சார்பில் சுமார் ரூ.49 லட்சம் வரி விதிக்கப்பட்டிருந்தது. அந்த தொகையையும் சாந்தா ஜெயராமன் நகராட்சிக்கு செலுத்தினார்.

நிலத்தை தானமாக வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. சாந்தா ஜெயராமன் பங்கேற்று, நிலத்தை தானமாக வழங்குவதற்கான ஆவணங்களை நகராட்சி ஆணையர் கணேசனிடம் ஒப்படைத்தார். அப்போது, நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவர் கவுதமன், பொள்ளாச்சி நகர வடக்கு திமுக பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இடம் தானமாக வழங்கிய சாந்தா ஜெயராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொள்ளாச்சி நகரில் பல்லடம் சாலையில் எங்கள் குடும்ப சொத்தாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் எனது பங்கு மற்றும் எனது மகன், மகள் ஆகியோரது பங்காக கிடைத்த 80 சென்ட் நிலத்தை, பொள்ளாச்சி நகராட்சிக்கு தானமாக வழங்கி உள்ளேன். இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.32 கோடி. இந்த நிலத்தை மக்களின் பயன்பாட்டுக்காக சாலை அமைக்க மகிழ்ச்சியுடன் கொடுக்கிறேன். நிலுவையில் உள்ள வழக்கு வாபஸ் பெறப்படும் என்றார்.