பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் துணைக் கலந்தாய்வு தேதி தள்ளிப்போகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

2025- 26ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் கலந்தாய்வில் மூன்று சுற்றுகளும் அண்மையில் நடந்து முடிந்தன. மொத்தம் 423 கல்லூரிகள் இந்த கலந்தாய்வில் பங்கேற்றன.

40 ஆயிரம் இடங்களுக்கு துணைக் கலந்தாய்வு

இந்த ஆண்டு மொத்தம் உள்ள 1,87,227 இடங்களில் முதல் சுற்றுக் கலந்தாய்வில் 26,719 இடங்களும் இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில் 54,552 இடங்களும் நிரம்பி உள்ளன. தொடர்ந்து மூன்றாம் சுற்றுக் கலந்தாய்வில் 51429 இடங்கள் நிரப்பப்பட்டன. இதன்மூலம் தற்போதுவரை மொத்தம் 1.40 லட்சம் இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. மீதமுள்ள சுமார் 40 ஆயிரம் இடங்களுக்கு துணைக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

முந்தைய கலந்தாய்வுகளில் அதிகபட்சமாக கணினி அறிவியல் சார்ந்த துறைகளில் அதிகபட்சமாக இடங்கள் நிரம்பி உள்ளன. அடுத்ததாக மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு சார்ந்த துறைகளில் (இசிஇ) அதிக இடங்களும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் சார்ந்த துறைகளில் (இஇஇ) அடுத்தபடியாகவும் இடங்கள் நிரம்பி உள்ளன. குறைந்தபட்சமாக மெக்கானிக்கல் மற்றும் சிவில் சார்ந்த துறைகளில் சொற்ப எண்ணிக்கையிலான இடங்கள் மட்டுமே நிரம்பி இருந்தன.

யாருக்கெல்லாம் துணைக் கலந்தாய்வு

மூன்று சுற்றுக் கலந்தாய்வு முடிந்த நிலையில், துணைக் கலந்தாய்வுக்கு நடைபெறுவது வழக்கம். துணைத் தேர்வுகளில் எழுதித் தேர்ச்சி பெற்றோருக்கும் முந்தைய கலந்தாய்வுகளில் இடம் கிடைக்காதவர்களும் இதில் கலந்துகொள்வர்.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு முடிந்துவிட்ட நிலையில் துணைக் கலந்தாய்வில் பங்கேற்க 15 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தற்போது இந்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் முடிவதில் கால தாமதம் ஏற்படடுவதாகக் கூறப்படுகிறது. இதனால் துணைக் கலந்தாய்வு திட்டமிட்ட தேதியில் இருந்து சிலநாட்கள் தள்ளிப் போகலாம் எனவும் கூறப்படுகிறது. இந்தக் கலந்தாய்வில் சுமார் 15 ஆயிரம் இடங்கள் காலி ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tneaonline.org/