தஞ்சாவூர்: பேஸ்புக் காதலனுடன் சேர்த்து வைக்க கோரி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் போலீஸ் ஸ்டேஷனிலேயே விஷம் குடித்த இளம்பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடன் அந்த இளம்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் வர்ஷா (28). இவருக்கு கடந்த ஒன்பது ஆண்டுக்கு முன்பு திருமணமான நிலையில், ஒன்பது வயதில் மகளும், ஐந்த வயதில் மகனும் உள்ளனர். வர்ஷாவின் கணவர் வினோத், கடந்த ஆண்டு இறந்து விட்டார்.

இந்நிலையில், வர்ஷாவின் தாய் மெர்லின் மேரி சிங்கப்பூரில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இதனால், வர்ஷாவும் சிங்கப்பூர் சென்றார். அப்போது, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலிபுல்லா நகரை சேர்ந்த கார்த்திக் (29), என்பவருடன், பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். தொடர்ந்து இருவரும் கணவன் – மனைவியாக வாழ்ந்துள்ளனர்.

பிறகு, வர்ஷாவும், அவரின் தயாரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களின் சொந்த ஊரான பட்டுக்கோட்டை திரும்பியுள்ளனர். இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து வந்த கார்த்திக், பட்டுக்கோட்டையில் வர்ஷா வீட்டில் வந்து தங்கியுள்ளார். இதனையறிந்த கார்த்திக் பெற்றோர் ஆத்திரமடைந்து வர்ஷாவிடம் தகராறு செய்துள்ளனர்.

இதனால், வர்ஷாவும், கார்த்திக் இருவரும் பட்டுக்கோட்டையிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு சென்று விட்டனர். இதையடுத்து அவர்களை தேடிப்பிடித்து கார்த்திக் உறவினர்கள் ஊருக்கு அழைத்து சென்றனர். இது குறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில், வர்ஷா புகார் செய்தார்.

புகாரின் பேரில், போலீசார் கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி, கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்து, பிறகு, ஜாமீனில் விடுவித்தனர். கார்த்திக்கை அவரது பெற்றோர் மீண்டும் அழைத்து சென்றதால் மனமுடைந்த வர்ஷா இன்று அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, கார்த்திக்குடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அப்போது போலீசார் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் வர்ஷா தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை போலீஸ் ஸ்டேஷனிலேயே குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடன் வர்ஷா மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பட்டுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது_