தஞ்சாவூர்: தஞ்சாவூர் நீலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேருந்து சேவை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அப்பகுதி மக்கள் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு அளித்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் நீலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட கன்னியம்மாள் நகரில் 300 குடும்பங்களும் அதை ஒட்டி மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாதா கோவில் பகுதி கன்னியம்ரான் நகரில் 280 குடும்பங்களும் வசித்து வருகிறோம். மேலும் அதை சுற்றி உள்ள அம்மன் நகர் புவனேஷ்வரி நகர் மற்றும் இந்திரா பேகம் நகர், பல்லவன் நகர், நேரு நகர் போன்ற பகுதிகளிலும் சுமார் 1100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.

பள்ளி செல்லும் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் தினக்கூலி தொழிலாளர்கள், சாலையோரத்தில் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் என இப்பகுதியை சேர்ந்தவர்கள் தினமும் காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் இங்கிருந்து 3 கி.மீ. தூரம் நடந்து சென்று மருத்துவக்கல்லூரி பேருந்து நிறுத்தத்தில்தான் பேருந்தில் ஏறி செல்ல வேண்டும். காலை மற்றும் மாலை நேரத்திலும், பணி முடிந்து இரவு திரும்பு வரும் போதும் பேருந்து வசதி இல்லாததால் இப்பகுதியினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம்.

இதனால் மாணவர்களும் பெண்களும் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக இரவு 7 மணிக்கு மேல் சமூக விரோதிகளாலும் தெருவில் சுற்றி திரியும் நாய்களாலும் அச்சுறுத்தப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதற்கு முன் இப்பகுதி குடியிருப்புவாசிகளால் பல முறை பேருந்து வசதி கேட்டு பல கோரிக்கை மனுக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அரசு தரப்பில் இருந்து வந்து நேரில் ஆய்வு செய்து சாலை வசதி சரி இல்லை என்று கூறி சென்று விட்டார்கள். இதையே ஒவ்வொரு முறையும் காரணமாக கூறுகின்றனர்.

எனவே மாவட்ட கலெக்டர் இப்பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து இப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் மற்றும் இப்பகுதி பொதுமக்களின் 20 ஆண்டுகால எதிர்பார்ப்பான கனவான அடிப்படை ஜீவாதார வசதியான போக்குவரத்து வசதியை செய்து தார் சாலையை அகலப்படுத்தி அரசு போக்குவரத்து பேருந்தை இப்பகுதிக்கு காலை மற்றும் மாலை என இரு வேளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை காலம் தாழ்த்தாமல் பிரித்து தர கோரி ஒரத்தநாடு தாலுக்கா கரைமீண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா கரைமீண்டார் கோட்டை பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எங்களுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்த்துறை மூலம் இடம் வழங்கப்பட்டது. அந்த இடத்தை எங்களுக்கு இன்னும் பிரித்துக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.

எங்களுக்கு இருக்க இடம் இல்லாமல் வசித்து வருகிறோம். இது குறித்து பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு விரைவாக இடத்தை பிரித்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.