தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு 7 மாத ஆண் குழந்தை இறப்புக்கு பின்னணியில் பலூன் ஒன்று காரணம் என்று தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35), இவரது மனைவி சிவகாமி (30). இந்த தம்பதியின் 7 மாத ஆண் குழந்தை பிரகதீசன். துறுதுறுவென்று இருந்த குழந்தை பிரகதீசனின் வாழ்க்கைக்கு எமனாகி விட்டது பலூன் ஒன்று.

வழக்கம் போல் மதிய நேரத்தில் குழந்தை வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தது. வீட்டில் இருந்தவர்கள் குழந்தை நன்கு விளையாடிக் கொண்டு இருந்ததை கண்டு மகிழ்ச்சியில் இருந்தனர். பின்னர் அப்போதுதான் திடீரென குழந்தை மயங்கிய நிலையில் அசைவின்றி கிடப்பதை பார்த்த தாய் சிவகாமி திடுக்கிட்டார். ஒருவேளை குழந்தை பசியால் மயங்கியது போல் இருக்கிறதோ என்று நினைத்து பால் கொடுக்க முயன்ற போது, மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, குழந்தையை பரிசோதனை செய்த, டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவமனையில் கதறி அழுதது பார்ப்பவர்கள் மனதை கனக்க செய்தது. பின்னர் பெற்றோர், உறவினர்கள், குழந்தை உடலை ஊருக்கு கொண்டு சென்றனர். இறுதி சடங்கிற்கும் ஏற்பாடு செய்தனர்.

இருப்பினும் குழந்தை இறப்பில் சந்தேகம் ஏற்பட்டதால், குழந்தையின் இறப்பு குறித்து அறிய, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, குழந்தையின் உடலை நேற்று கொண்டு வந்தனர். அங்கு, குழந்தையினை உடலை பிரேத பரிசோதனை செய்த போது, குழந்தையின் வயிற்றில் பலுான் இருந்தது தெரியவந்தது. குழந்தை பலுானை விழுங்கியதால் தான் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்து, பெற்றோரிடம் குழந்தையின் உடலை ஒப்படைத்தனர். இது தொடர்பாக திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கைக்குழந்தை உள்ள வீட்டில் இதுபோன்று குழந்தைகள் எளிதில் விழுங்கும் வகையில் உள்ள பொருட்களை அதன் கைகளுக்கு எட்டாத வகையில் வைக்க வேண்டும். குழந்தைகள் மீது எப்போதும் கவனம் வைத்திருக்க வேண்டும்.