தர்மபுரியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெற்றோரை இழந்த இருதய சிகிச்சை செய்து கொண்ட சிறுமிக்கு பெண்ணாகரம் வட்ட அரசு அலுவலர் சார்பில் நிதி உதவிகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் சாலை வசதி, பஸ் வசதி, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய 576 மனுக்களை அளித்தனர்.

மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் கிறிஸ்த்துவ தேவாலயங்கள் பணிபுரியும் 15 உபதேசியலாளர் மற்றும் பணியாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி வழங்கினார்.

மேலும் சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி சார்ந்த பெற்றோரை இழந்த பிரதிக்ஷா 13 என்ற சிறுமி தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது பாட்டி பாப்பாத்தியின் பராமரிப்பில் உள்ளார். இவர் பென்னாகரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் உதவி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். இதை அடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் உடனடி நடவடிக்கையாக சேலம் மாவட்ட குடும்ப அட்டையிலிருந்து சிறுமியின் பெயர் நீக்கம் செய்யப்பட்டு அவரது பாட்டி பாப்பாத்தியின் குடும்ப அட்டையில் சேர்க்கப்பட்டது.

மேலும் சிறுமி பென்னாகரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு சேர்க்கப்பட்டார். அந்த சிறுமிக்கு இருதயத்தில் பிரச்சனை இருந்ததால் சேலம் கோகுலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 12ஆம் தேதி இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார்.

சிறுமி பிரதிக்ஷாவின் தொடர் சிகிச்சைக்காகவும் மற்றும் பரிசோதனைக்காக பென்னாகரம் வட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் இணைந்து ஒரு லட்சம் தொகையை நன்கொடையாக சேகரித்து மாணவி பெயரில் தபால் நிலையத்தில் சேமிப்பு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. அந்த வங்கி கணக்கு புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேற்று சிறுமியின் பாட்டி பாப்பாத்தி இடம் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்க் பிரின்ஸி ராஜ்குமார் தனித்துணை ஆட்சியர் தனப்பிரியா மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலவலர் சையது முகையதீன் இப்ராஹிம் தாசில்தார் சுகுமார் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்