ராம் சரண் நடிப்பில் வெளியான ‘பெத்தி’ திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் பாலியல் ரீதியாகச் சித்தரிக்கப்பட்டது தொடர்பான சர்ச்சைக்கு நடிகை ஜான்வி கபூர் பதிலளித்துள்ளார். கரண் ஜோஹரின் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், அந்தக் காட்சிகள் குறித்து தனது வருத்தத்தையும், தனது தரப்பில் இருந்த பொறுப்பையும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்த அவமானத்தை வாழ்க்கை முழுவதும் சுமப்பேன்

“அந்தத் திரைப்படத்தில் பலர் கடுமையாக உழைத்துள்ளனர். இதைப் பற்றிப் பேச நான் தயங்கியதற்கு அதுவும் ஒரு காரணம். ஆனால், அந்தச் சர்ச்சையில் என்னுடைய பங்கிற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்ற சித்தரிப்புகள் சமூகத்தில், குறிப்பாகப் பெண்கள் தொடர்பாக, ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான தாக்கம் எனது மனசாட்சியை உறுத்துகிறது. அந்த அவமானத்தை நான் எப்போதும் சுமப்பேன்.

நான் இன்னும் அதிகமாகச் செய்திருக்க முடியுமா? இன்னும் விழிப்புடன் இருந்திருக்க முடியுமா? இதை ஒரு பெரிய பிரச்சினையாக எழுப்பியிருக்க முடியுமா? நிச்சயமாக முடியும். அந்தக் காட்சிகள் பிரச்சினைக்குரியவையா? பெண்களைத் தீவிரமாகப் பண்டமாக்கும் வகையில் அமைந்தனவா? கதையின் வழியாகப் பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் வகையில் இருந்தனவா? ஆம்.

இனிமேல் இதுபோன்ற ஒன்று நடக்காமல் பார்த்துக்கொள்வதுதான் என்னால் செய்யக்கூடிய ஒரே விஷயம். நான் இன்னும் விழிப்புடன் இருந்திருக்க வேண்டும், பெரிய அளவில் எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும் என்று என்னை நானே குறை கூறிக்கொண்டேன்.

இயக்குநர் சொல்வதைக் கேட்டு தொழில்முறையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். படப்பிடிப்பின்போது தகவல்கள் கிடைக்கக் கிடைக்க, அந்தக் காட்சிகளை எப்படிக் குறைவான பிரச்சினைக்குரியதாக மாற்றுவது என்று என்னால் முடிந்தவரை முயன்றேன். தென்னிந்தியப் படங்களில் முழுமையாக எழுதப்பட்ட திரைக்கதை இருப்பது அரிது. அதிலும் கேமரா கோணங்கள் எப்படி இருக்கும் என்பது திரைக்கதையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பது மிகவும் அரிது.

இருப்பினும், என்னுடைய பங்கிற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் சலுகைகள் நிறைந்த பின்னணியில் இருந்து வருகிறேன். அந்தச் செல்வாக்கை நான் பயன்படுத்தியிருக்க வேண்டும். எனது பின்னணி காரணமாக எப்படியும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தியிருக்கலாம்” என்று ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அனுபவம் குறித்து அவர் பேசுகையில், “இதுபற்றிப் பேசும்போது நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். என்னை ஒரு பாதிக்கப்பட்டவராகக் காட்டிக்கொள்ள முயற்சிப்பதாகத் தோன்றுவதை நான் விரும்பவில்லை. ஆனால், ஒரு வகையில் அது எனது எல்லையை மீறிய அனுபவமாக இருந்தது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ராம் சரணின் ‘பெத்தி’ படத்தில் ஜான்வி கபூரின் அச்சியம்மா கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து எழுந்த விமர்சனங்களே இந்தச் சர்ச்சைக்குக் காரணம். சர்ச்சையைத் தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு சனா மன்னிப்புக் கேட்டதுடன், விமர்சனத்துக்குள்ளான காட்சிகளில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.