நடிகர் விஜய் தென் இந்திய திரையுலகை தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே, தெரிந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். தமிழ் திரையுலகின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் சூழலில் தான், அதனை விட்டு முழுவதுமாக விலகி தனது அரசியல் பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார்.

அரசியலுக்கு வந்த விஜய்

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்குவதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலே தங்களது இலக்கு எனவும் விஜய் அறிவித்தார். அடுத்தடுத்து கட்சிக் கொடி, கட்சிக்கான பாடலையும் வெளியிட்டார். இந்நிலையில் தான், வரும் 27ம் தேதி தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சியும் நடந்து முடிந்துள்ளது. இதனிடையே நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் கட்சி உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றிக் கழக மாநாடு

மேலும் நடிகர் விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என ஒற்றை குறிக்கோளுடன் நகர்ந்து வருவதாக தெரிகிறது. கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, பல்வேறு குழுக்களை அமைத்து விஜய் கண்காணித்து வருகிறார்.

தவெக பயிலரங்கம்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டினையொட்டி, பணிக்குழுக்களுக்கான பயிலரங்கம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்றது. இந்த பயிலரங்கினை தொடங்கி வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் உரையாற்றினார்.

அப்போது அவர், தவெகவில் பதவி என்பது நிரந்தரமானது அல்ல. எதிர்பார்ப்பில்லாமல் உழைப்பவர்களுக்கு அங்கீகாரத்தை விஜய் வழங்குவார் என்றும் தெரிவித்தார். நம்மை பார்த்துதான் மற்றவர்கள் அரசியலை கற்றுகொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை விஜய் எடுத்துள்ளார் என்றார். மேலும் பேசுகையில், அப்பா அம்மா கால்ல மட்டும் தான் நீங்க விழணும். வேற யாரோட காலிலும் நீங்க விழக்கூடாது என பேசி இருந்தார். இவ்வாறு பேசுவதற்கு பின்னணியில் விஜய் அறிவுரை இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விஜயின் தளபதி புஸ்ஸி ஆனந்த்

தமிழக வெற்றிக் கழகத்தின் அகில இந்திய பொதுச் செயலாளராக உள்ள புஸ்ஸி ஆனந்த் விஜயன் முக்கிய தளபதிகளின் ஒருவராக இருக்கிறார். ஒரு சில நிர்வாகிகளை பதவி வேண்டும் என்பதற்காக, புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்து பதவியை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

காலில் விழுவதை புஸ்ஸி ஆனந்த் ஊக்குவித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சமீபத்தில் கூட நடிகர் தாடி பாலாஜி கட்சியில் இணைந்த போது காலில் விழுந்தது வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குறித்த செய்திகள் மற்றும் சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்திருந்தது.

உடனடியாக கண்டித்த விஜய்

சமூக வலைதளம் மற்றும் செய்திகளில் விமர்சனம் எழுந்ததுமே உடனடியாக இது கட்சியின் தலைவராக இருக்கக் கூடிய விஜய் கவனத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த விஜய், கோபமடைந்ததாகவும் உடனடியாக இதுகுறித்து புஸ்ஸி ஆனந்திற்கு அறிவுரையும் வழங்கி உள்ளார். நமது கட்சியில் இதுபோன்று நடக்கக்கூடாது, எனவே இது தொடராமல் இருக்க இப்போதே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விஜய் அறிவுரை வழங்கி உள்ளார். ஆரம்ப கட்டத்திலேயே இதை தடுத்து நிறுத்துங்கள் இல்லையென்றால், தவறான முன் உதாரணமாக அமைந்து விடும் எனவும் விஜய் கோபமாக கூறியதாக தெரிகிறது.

இதனால்தான் இன்று நடைபெற்ற கூட்டத்தில், மறைமுகமாக யார் காலிலும் நாம் விழக்கூடாது, பதவி என்பது நிரந்தரம் கிடையாது என புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுக்கு மறைமுகமாக அறிவுரைகளை வழங்கியுள்ளார். ஆரம்பித்திலேயே விஜய் இந்த பிரச்சனையை முடிவு கட்டிருப்பது, தமிழக வெற்றிக் கழக கட்சியினர் மற்றும் அரசியல் விமர்சனகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.