மின்சார வாகனங்களுக்கு முக்கியத்துவம்

நாளுக்கு நாள் மாறி வரும் நவீன காலத்திற்கு ஏற்ப தொழில் நுட்பங்களும் வளர்ந்து வருகிறது. தினந்தோறும் பல லட்சம் வாகனங்கள் ஏற்படுத்தும் மாசுவால் சுற்று சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சாரத்தில் வாகனங்களை இயக்க ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் மாசு குறைப்பதுடன், பசுமையான போக்குவரத்து முறைக்குத் தமிழக அரசு ஒரு முக்கிய நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது. இதற்கான பல்வேறு சலுகைகளையும் அரசு அளித்து வருகிறது.

இதன் காரணமாக பல இடங்களில் மின்சாரத்தில் இயக்கும் பேருந்து முதல் பைக்குகள் வரை விற்பனை அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் பேருந்துகளும் மின்சார பேருந்துகளாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மின்சார வாகனங்கள் மொத்த விற்பனைகளில் 2020ஆம் ஆண்டில் சுமார் 0.7% ஆக இருந்தது. தற்போது அதன் விற்பனை 2024 ஆம் ஆண்டில் 6.3% ஆக உயர்ந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் இன்னும் அதிகரித்துள்ளது. எனவே மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து, 2030க்குள் அனைத்து வாகனங்களையும் மின்சாரத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக 2030க்குள் 2-சக்கர வாகனங்களில் 80% மின்சார வாகனங்களாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது.

குடியிருப்புகளில் சார்ஜிங் வசதி

இதனையடுத்து அடுத்த சில ஆண்டுகளில் மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பை ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு செயல்படுத்துகிறது. இந்த நிலையில் இனி அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாகங்கள் கட்டுபவர்களுக்கு புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு வீடுகளில் கட்டடங்கள் கட்ட பல்வேறு விதிமுறைகள் ஏற்கனவேவகுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக பார்க்கிங் வசதி உள்ளது. இந்த நிலையில் தான் அபார்ட்மெண்டுகளில் மின்சார வாகனத்திற்கான சார்ஜிங் வசதி அமைக்க வேண்டும் என தமிழக அரசு புதிதாக உத்தரவிட்டுள்ளது.

புதிய விதியை அறிவித்த தமிழக அரசு

குடியிருப்புகள், வணிகத் தொழிற்சாலை மற்றும் கல்வி நிறுவன வளாகங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் ஏற்படுத்தும் வகையில் விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. புதிதாக திருத்தம் செய்யப்பட்ட விதிகளின் படி 750 சதுர மீட்டருக்கு அதிகமான கட்டுமான பரப்பு அல்லது 8 வீடுகளுக்கும் அதிகம் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள், 300 சதுர மீட்டர் FSI-க்கு மேல் உள்ள வணிக கட்டிடங்களில் மின்சார வாகஙனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது.