தஞ்சாவூர்: புதிய ரயில் சேவைகள் காரணமாக சுற்றுலாத்துறை அதிகரிப்பதோடு, உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளிக்கப்பட்டு இளைஞர்களுக்கு பல வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேம்பட்ட இந்தியாவை உருவாக்க, மேம்பட்டதொரு தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் எங்களுடைய இலக்கு என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

அருமையான இந்த நகரமான திருச்சிக்கு நான் வந்திருப்பது உள்ளபடியே எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது. இன்றைய நிகழ்ச்சி தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமான ஒன்று. 5,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களோடு தொடர்புடையது இது. இந்த திட்டங்கள் எல்லாம் தூய்மையான எரிசக்தி, பெட்ரோல் தொடர்பான தயாரிப்பு, நெடுஞ்சாலைகள், ரயில்வே துறை, ஊரகப்பகுதி சாலைகள் பற்றியன. இவை எரிசக்திக்கான அணுகலை அதிகரித்து, இணைப்புத்திறனை மேம்படுத்தி, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவல்லது.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் நகர எரிவாயு பகிர்மான கட்டமைப்பின் அடிக்கல் நாட்டப்படுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சுமார் 3,700 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கட்டமைப்பு தமிழ்நாட்டின் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு பயனாகும். இது சுமார் 9 லட்சம் குடும்பங்களுக்கும், நூற்றுக்கணக்கான வர்த்தக நிறுவனங்களுக்கும் குழாய் வழி இயற்கை எரிவாயு கொண்டு சேர்க்கும்.

குழாய் வழி எரிவாயு நேரடியாக இல்லங்களுக்குச் சென்று சுலபமாக வாழும் தன்மையை மேம்படுத்தும். இதன் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும். இயற்கை எரிவாயு என்பது சூழலுக்கு நேசமான எரிபொருள். இது காற்று மாசினைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. எட்டு ஆண்டுகால இந்த திட்டத்தால் சுற்றுச்சூழல் தாக்கம் எப்படி இருக்கும் என்று என்னிடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்றால், இது சுமார் 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இருக்குமாம். சென்னையில் இருக்கும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் லூப் பிளெண்டிங் ஆலை இன்று நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த வகையிலான உலகிலேயே மிகப்பெரிய ஆலைகளில் இதுவும் ஒன்று என்பது உங்களுக்கு பெருமிதத்தை அளிக்கும். தமிழ்நாட்டிலும் சரி, மற்ற இடங்களிலும் சரி, இந்த ஆலை பல முக்கியமான தொழிற்சாலைகளின் தேவைகளை நிறைவேற்றி வைக்கின்றது. மசகு எண்ணெய் (Lubricants) உள்ளூர் மட்டத்திலான தயாரிப்பில் அதிகரிப்பு, இறக்குமதிகளைக் குறைப்பதோடு தேசத்தின் பணத்தையும் சேமித்து வைக்கின்றது. இன்று நாம் 370 கிலோமீட்டர்கள் நீள ஊரகப்பகுதி சாலைகளைத் தொடங்கி வைத்திருக்கின்றோம்.

இந்த பணிகள் அனைத்தும் பிரதம மந்திரி ஊரகப்பகுதி சாலைகள் திட்டப்படி போடப்பட்டிருக்கின்றன. இந்த சாலைகள் ஒவ்வொன்றும் வெளிப்புற கட்டமைப்பின் வெறும் ஒரு பாகம் அல்ல; இவை காரணமாக நோயாளிகளுக்கு மேம்பட்ட உடல்நல வசதிகளுக்கான அணுகல் திறன் சாத்தியப்படுகின்றது. மாணவர்களால் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சிரமம் ஏதுமின்றி பயணிக்க முடிகின்றது. விவசாயிகளால் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தங்களுடைய விளைபொருட்களை விற்கவோ, தேவையான உள்ளீடுகளை வாங்கவோ முடிகின்றது.

மொத்தத்திலே ஒவ்வொரு சாலையும் ஊரகப்பகுதி பொருளாதாரத்தை உயர்த்தி சுலபமாக வாழும் தன்மையினை அதிகரிக்கின்றது. கடந்த ஆண்டு ஆடி திருவாதிரை விழாவிற்காக கங்கை கொண்ட சோழபுரம் வந்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது. மாமன்னர் ராஜேந்திர சோழன் எழுப்பித்த இந்த மகத்தான ஆலயத்தின் கட்டுமானத்தின் ஆயிரமாவது ஆண்டுத் தொடக்கத்தை நாம் கொண்டாடினோம். இது யுனெஸ்கோ (UNESCO) அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இடம். உலகெங்கிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை இது ஈர்க்கின்றது.

இன்று நாம் அங்கே ஒரு முக்கியமான நெடுஞ்சாலைத் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டியிருக்கின்றோம். தற்போதைய நெடுஞ்சாலை ஆலயத்திற்கு வெகு அருகிலேயே இருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை இது அளிக்கின்றது. புதியதொரு புறவழிச்சாலை அமைக்கப்படுவதால் மற்ற வாகனங்கள் ஆலயத்திற்கு அப்பால் திருப்பி விடப்படும். இதனால் அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்கும்."

கடந்த வாரம் நான் மதுரை வந்தபோது அம்ரித் பாரத் திட்டத்தின்படி எட்டு நவீன மறுவடிவமைக்கப்பட்ட ரயில் நிலையங்களைத் தொடங்கி வைத்தோம். இன்று பல புதிய ரயில் சேவைகளுக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கின்றது. இவை நாகர்கோவில், கோயம்புத்தூர், ராமேஸ்வரம், திருநெல்வேலி, மயிலாடுதுறை, காரைக்குடி ஆகிய இடங்களை மற்ற பகுதிகளோடு இணைக்கின்றது.

இந்த புதிய ரயில் சேவைகள் காரணமாக சுற்றுலாத்துறை அதிகரிப்பதோடு, உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளிக்கப்பட்டு இளைஞர்களுக்கு பல வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேம்பட்ட இந்தியாவை உருவாக்க, மேம்பட்டதொரு தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் எங்களுடைய இலக்கு. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு முழு அர்ப்பணிப்போடு இருக்கின்றது மத்திய அரசு. மாநிலத்தின் மேன்மைக்கு நாங்கள் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகின்றோம். இப்படி மேலும் தொடர்ந்து பாடுபட்டும் வருவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.