காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 45,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஐந்தாவது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது‌. இதனால் கபினி அணையில் 80 அடியாகவும், கிருஷ்ணராஜசாகர் அணையில் 119 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது‌. இதனால் கபினியிலிருந்து வினாடிக்கு 70,000 கனஅடி, கிருஷ்ணராஜசாகர் அணையில் வினாடிக்கு 4800 கன அடியாகவும் மொத்தம் 75,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து, நேற்று காலை முதல் நீர்வரத்து வினாடிக்கு 45,000 கனஅடி என படிப்படியாக அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 65,000 கன அடியாக அதிகரித்ததுள்ளது.

மேலும் இந்த நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை, ஐந்தருவிகள் தண்ணீரில் மூழ்கி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் 5-வது நாளாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்துள்ளார். அதேபோல் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஆற்று பக்கம் கொண்டு செல்ல வேண்டாம் எனவும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் கபினி அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 70,000 கன அடியில் இருந்து 43,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் நாளை குறைய வாய்ப்புள்ளது. ஆனால் கிருஷ்ணராஜ் சாகர் அணையில் நீர்மட்டம் 120 அடியை எட்டி இருப்பதால் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள ஆலம்பாடி, ஊட்டமலை, ஒகேனக்கல், பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதியான கேரள மாநில வயநாடு பகுதியில், ஜூலை 21 வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் மழை தீவிரமடைந்தால், தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு, மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.