முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ளது. இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக, விடுமுறை நாட்கள், விசேஷ தினங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில், ஐப்பசி மாதப் பிறப்பு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்தனர்.

அதிகமான பக்தர்கள் வருகையால் மலைக்கோயிவிக்குச் செல்லும் படிப்பாதை, மின் இழுவை ரயில் நிலையம் மற்றும் ரோப் கார் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. முருகப்பெருமானைத் தரிசனம் செய்வதற்காகப் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக, சில பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், மலைக்கோயில் பகுதியில் மயில் ஒன்று தனது தோகையை விரித்து ஆடிய அழகிய காட்சி பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது. முருகப்பெருமானைத் தரிசிக்க வந்த பக்தர்கள், மயிலின் தோகை விரிந்தாடும் காட்சியைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர். பக்தர்கள் கூட்டத்துக்கு மத்தியில் இடம்பெற்ற இந்தக் காட்சி, பழனி மலைக்கோயிலின் இயற்கை அழகுக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

பழனி மலைக்கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக்காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஆனந்த விநாயகரை பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் வழிபட்டனர்.

பழனிக்கு வரும் பக்தர்கள் சண்முக நதி, இடும்பன் குளம், சரவணப் பொய்கை உள்ளிட்ட பகுதிகளில் நீராடி, முடிக்காணிக்கை செலுத்தி, பின்னர் மலைக்கோயிலில் முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். அதன்படி, பழனிக்கு வந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி, குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வருகை அதிகரித்ததையடுத்து, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பக்தர்கள் பாதுகாப்பாகத் தரிசனம் செய்வதை உறுதிப்படுத்தவும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காவல்துறையினரும் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.