ஸ்வீடனில் பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவில் அமைந்துள்ள ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக் ஹோமில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஒரிபுரோ. இங்கு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் திடீரென ஒரு நபர் பயங்கரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 10 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர்.

விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

"இன்று சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும். சம்பவத்தின் அளவு காரணமாக சரியான எண்ணிக்கை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை" என்று ஃபாரஸ்ட் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தனியாகச் செயல்பட்டிருக்கலாம் என்றும், தற்போது பயங்கரவாதம் தான் இதற்குக் காரணம் என்று சந்தேகிக்கவில்லை என்றும் போலீசார் நம்புகின்றனர்.

இதுகுறித்து ஸ்வீடன் பிரதமர் கிறிஸ்டர்சன் தனது எக்ஸ் தளத்தில், “இது அனைவருக்கும் வேதனையான நாள். என் எண்ணங்கள் முழுவதும் சாதாரண பள்ளி நாள் பங்கரவாத நாளாக மாறியதை பற்றியே இருக்கிறது. உயிருக்கு பயந்து வகுப்பறையில் சிக்கிக் கொள்ளும் கொடூரத்தை யாரும் தாங்கிக் கொள்ள முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு யாரோ ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்து அனைவரையும் வெளியே செல்லுமாறு கூச்சலிட்டதாக பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் என்னுடைய 15 மாணவர்களையும் அழைத்துக்கொண்டு நடைபாதைக்குள் சென்றேன், நாங்கள் ஓட ஆரம்பித்தோம். பின்னர் இரண்டு துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. ஆனால் நாங்கள் தப்பித்தோம். நாங்கள் பள்ளி நுழைவாயிலுக்கு அருகில் இருந்தோம்” எனத் தெரிவித்தார்.