மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் கிராமத்தை அடுத்த அரசலங்குடியில் தனியார் பள்ளி மினிபேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியின் மினிபேருந்தை வழிமறித்த போதையில் இருந்த மூன்று இளைஞர்கள், பேருந்தின் கண்ணாடியில் கல்வீசித் தாக்கியதோடு, ஓட்டுநரையும் மாணவர்களையும் அச்சுறுத்திய சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த பயங்கரச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுத்துள்ளது.

நடந்தது என்ன.‌?

மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் காவல் சரகத்திற்கு உட்பட்ட சங்கரன்பந்தல் கிராமத்தை அடுத்துள்ள அரசலங்குடி கிராமத்தில், டி.எம்.ஐ. (TMI) பள்ளியின் மினிபேருந்து நேற்று மாலை மாணவர்களை அவரவர் வீடுகளில் இறக்கி விடுவதற்காகச் சென்று கொண்டிருந்தது. எல்.கே.ஜி. வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 25-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இந்த வாகனத்தில் இருந்தனர்.

பேருந்து அரசங்குடி - எடுத்துக்கட்டி செல்லும் வழியில் உள்ள மாங்குடி என்ற இடத்தை அடைந்தபோது, மூன்று இளைஞர்கள் குடிபோதையில் சாலையின் குறுக்கே வந்து பேருந்தை வழிமறித்தனர். சிறிது நேரத்திலேயே அவர்கள் பேருந்து ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டு, ஆத்திரத்தின் உச்சியில் கல்வீசித் தாக்கத் தொடங்கினர். கல் வீச்சால் பேருந்தின் கண்ணாடிகள் சேதமடைந்தன. மேலும், அவர்கள் கைகளாலும் கண்ணாடியைத் தாக்கியதோடு, பேருந்தின் வைபர்களையும் உடைத்து பயங்கரமாக மிரட்டினர்.

அலறிய மாணவர்கள்: சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ!

இந்த திடீர் தாக்குதலின்போதும், கண்ணாடிகள் உடையும்போதும் பேருந்தின் உள்ளே அமர்ந்திருந்த பிஞ்சுக் குழந்தைகள் உட்பட அனைத்து மாணவர்களும் பயத்தில் அலறித் துடித்தனர். அச்சத்தின் உச்சியில் குழந்தைகள் அழுத காட்சிகள் பார்ப்போரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. சிறிது நேரம் அராஜகத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள், பின்னர் தாங்களாகவே அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டனர்.

இந்த கோரச் சம்பவத்தின் வீடியோ, தாக்குதலின் அதிர்ச்சியையும், மாணவர்களின் அலறல் சத்தத்தையும் பதிவு செய்து, தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதைக்கண்ட பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மோதலுக்கான காரணம் என்ன? - போலீஸ் விசாரணை

இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாகப் பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில், இச்சம்பவம் ஒரு சாலைப் பிரச்சனையில் இருந்து தொடங்கியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

மாங்குடி பகுதியில் உள்ள வயலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய அவ்வூரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் டிவிஎஸ் எக்ஸல் மோட்டார் வாகனம் சாலையோரத்தில் கீழே சாய்ந்து கிடந்துள்ளது. போதையில் அங்கிருந்த இளைஞர்களிடம் தனது வாகனத்தை யார் தள்ளிவிட்டது என்று செல்வராஜ் கேட்டபோது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில், மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த பள்ளிப் பேருந்து, அவர்களுக்கு வழிவிடக் கோரி ஹாரன் அடித்ததால், ஆத்திரமடைந்த போதை இளைஞர்கள் தங்கள் கோபத்தை பள்ளி வாகனத்தின் பக்கம் திருப்பி, பேருந்தை வழிமறித்துத் தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை தேவை: வலுக்கும் கோரிக்கை

பள்ளிப் பேருந்தை வழிமறித்து, அதன் மீது தாக்குதல் நடத்தி, பள்ளி மாணவர்களை அச்சுறுத்திய இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், எடுத்துக்கட்டி காளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக செந்தில் என்பவரது மகன் 23 வயதான தாமரைச்செல்வன் என்பரை கைது செய்து மேலும் இருவரை பிடிப்பதற்குப் பொறையார் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள் நிறைந்த ஒரு வாகனத்தின் மீது போதையில் அராஜகம் செய்த இவர்களைக் காவல்துறை உடனடியாகக் கைது செய்து, கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் வலுவான கோரிக்கை எழுந்துள்ளது. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே, பள்ளி வாகனப் போக்குவரத்துப் பாதுகாப்பைப் பேண முடியும் என்றும், பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளைப் பயமின்றி பள்ளிக்கு அனுப்ப முடியும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.