மயான பூமி - பல ஆண்டுகள் கோரிக்கை

சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மயான பூமி வேண்டும் என பல ஆண்டுகளாக அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சட்டமன்றத்தில் பேசிய எம்.எல்.ஏ , ஆர்.டி சேகர்

இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இது குறித்து பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி சேகருக்கு கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் இது குறித்து பேசி இருந்தார்.

தமிழக அரசு வாக்குறுதி

கொடுங்கையூர் குப்பை கிடங்கு பகுதியில் கிறிஸ்தவர்கள் , இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மதத்தினருக்கு அவரது மத வழக்கப்படி உடல்களை அடக்கம் செய்ய மயான பூமி அமைத்து தரப்படும் என தமிழக அரசு சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ரூ.11.80 கோடி மதிப்பில் பணிகள் நிறைவு

கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு மயான பூமி அமைக்கும் பணிகள் சுமார் 11.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு , பணிகள் அனைத்தும் நிறைவடைந்து கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு மயான பூமியை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்து மதத்தினருக்கும் 3 ஏக்கர் நிலம் தயார்

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.‌ கிறிஸ்தவர்களுக்கு 3 ஏக்கர் நிலம் இஸ்லாமியர்களுக்கு மூன்று ஏக்கர் நிலம் தற்போது தயார் செய்யப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் இதனை ஒட்டியே இந்து மதத்திற்கு மூன்று ஏக்கர் பரப்பளவில் இடம் தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த பணிகள் முடிவுற்ற பிறகு அவர்களுக்கு இந்த இடம் அளிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் , மாமன்ற உறுப்பினர்கள் டில்லிபாபு , ஷர்மிளா காந்தி , உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.