ஏர் இந்தியா நிறுவனம் தனது சர்வதேச விமான சேவைகளை வரும் ஜூலை மாதம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக பல சர்வதேச வழித்தடங்களில் விமானங்களை இயக்குவது நஷ்டத்தை ஏற்படுத்துவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் கேம்ப்பெல் வில்சன், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஊழியர்களுக்கு அனுப்பிய உள்நாட்டுச் செய்தியில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

லாபமற்ற வழித்தடங்கள்

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சில விமான சேவைகளை ஏற்கனவே குறைத்துள்ளோம். விமான எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள கடும் உயர்வு, வான்வெளி மூடல்கள் மற்றும் நீண்ட பயணப் பாதைகள் காரணமாக எங்களின் பல சர்வதேச சேவைகள் நஷ்டத்தில் இயங்குகின்றன," என்று வில்சன் விளக்கியுள்ளார். இந்தச் சூழலை கருத்தில் கொண்டு, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களிலும் சேவைக் குறைப்பை நீட்டிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேற்கு ஆசிய மோதலால் அதிகரித்த செலவு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் சர்வதேச விமானப் போக்குவரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. முக்கிய வான்வழிப் பாதைகள் மூடப்பட்டுள்ளதால், மோதல் பகுதிகளைத் தவிர்க்க விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் எரிபொருள் பயன்பாடு மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

இது குறித்துப் பேசிய வில்சன், "தற்போதைய சூழல் மிகவும் சவாலானது. விமானங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் நிலைமை சீராகி, ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) விரைவில் திறக்கப்படும் என்று நம்புகிறோம்," எனத் தெரிவித்தார்.

நெருக்கடியில் ஏர் இந்தியா

ஏர் இந்தியா குழுமத்தின் நிதி நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 2026 மார்ச் 31-டன் முடிவடைந்த நிதியாண்டில், ஏர் இந்தியா சுமார் ரூ. 22,000 கோடிக்கும் அதிகமான நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின்படி, கடந்த ஆண்டை விட ஜெட் எரிபொருள் விலை 40% க்கும் மேலாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மேற்கு ஆசியா வழியாகச் செல்லும் நீண்ட தூர விமானங்களை நம்பியிருக்கும் ஏர் இந்தியாவுக்கு, இது இரட்டைப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயணிகளுக்குப் பாதிப்பு:

இந்தச் சேவைக் குறைப்பு காரணமாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாக வாய்ப்புள்ளது. விமானங்கள் ரத்து செய்யப்படலாம் அல்லது பயண நேரம் அதிகரிக்கக்கூடும்.

எனவே, சர்வதேசப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களது விமானத்தின் நிலையை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளுமாறும், கூடுதல் நேர அவகாசத்துடன் பயணத்தைத் திட்டமிடுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். புவிசார் அரசியல் பதற்றங்கள் தணிந்து, வான்வழிப் பாதைகள் சீராகும் வரை இந்த நிலை தொடரலாம் எனத் தெரிகிறது.