பணம் செலுத்தி விண்ணப்பித்தாலும் அதிகாரிகள் வருவதில்லை

பட்டா உள்ளிட்ட ஆவணங்களில் திருத்தம் செய்வது போன்ற பணிகளுக்கு, நிலத்தை அளந்து எல்லைகளை வரையறுக்க வேண்டும். இதற்கு குறுவட்ட அளவில், நில அளவர்கள் பணியில் உள்ளனர். உட்பிரிவு பட்டா கோரி விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட நிலத்தை நில அளவர்கள் தான் எல்லை வரையறை செய்ய வேண்டும்.

இது தவிர பொது மக்கள் தங்கள் நிலத்தை அளந்து, எல்லை வரையறை செய்து கொடுக்க கோரியும், தாலுகா அலுவலகங்களில் கட்டணம் செலுத்தி, மனு செய்கின்றனர். அவர்களின் நிலத்தை அளக்க நில அளவர்கள் எப்போது வருவர் என்பதே, தெரியாத நிலை உள்ளது.

பொது மக்கள் மனு - நோட்டீஸ் அனுப்ப வேண்டும்

கடந்த, 2020 - ல் சென்னை உயர் நீதிமன்றம் 30 நாட்களுக்குள் நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் நில அளவை துறை, 13 வழிகாட்டுதல்களை வழங்கியது. இதன் படி, பொது மக்கள் மனு செய்ததில் இருந்து, ஏழு நாட்களுக்குள் நிலத்தை அளப்பதற்கான நாளை குறிப்பிட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப வேண்டும். நில உரிமையாளர், அக்கம் பக்கத்து நில உரிமையாளர் என அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

இது குறித்து, பொது மக்கள் கூறியதாவது ;

நில அளவை பணி எப்போது நடக்கும் என்பது குறித்த நோட்டீஸ்கள் முறையாக வருவதில்லை. அப்படியே நோட்டீஸ் வந்தாலும், அந்த நாளில் நில அளவர் வருவதில்லை. இது குறித்து விசாரித்தால், நில அளவை பணிக்கு, 90 நாட்கள் வரை கால அவகாசம் உள்ளது என, அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், 90 நாட்கள் ஆனாலும் அதிகாரிகள் நிலத்தை அளக்க வருவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நில அளவையாளர்கள் கூறியதாவது ;

தமிழகத்தில் குறுவட்டத்துக்கு ஒருவர் என்ற அடிப்படையில், நில அளவையாளர் பணியிடங்கள் உள்ளன. ஆனால், நில அளவை கோரி வரும் விண்ணப்பங்கள் அதிகரித்து உள்ளன. எந்தெந்த தாலுகாக்களில், அதிக விண்ணப்பங்கள் வருகின்றன என்று பார்த்து, அதற்கு ஏற்ப, கூடுதல் அலுவலர்களை நியமிக்க வேண்டும் என இவ்வாறு அவர்கள் கூறினர்.