நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த பணகுடி அண்ணாநகரை சேர்ந்தவர் ரமேஷ் (41). இவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமா. இவர்களுக்கு ராபின் என்ற 14 வயது மகனும், காவ்யா என்ற 11 வயது மகளும் உள்ளனர். மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்த ரமேஷ் தனது மனைவியை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பியுள்ளார். குறிப்பாக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மனைவி வெளிநாட்டில் வேலை செய்வதற்காக சென்று உள்ளார். இந்த நிலையில் தனது இரு பிள்ளைகளை பராமரித்து வந்த ரமேஷ் இன்று காலை வேலைக்கு செல்லாத நிலையிலும், இரண்டு குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியே வராத நிலையிலும் வெகு நேரமாக மூவரையும் வெளியே காணாத நிலையில் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது மூவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் உறவினர் என அனைவரிடமும் விசாரணை நடத்தினர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் மிகவும் வறுமையில் இருந்த ரமேஷ் மனைவியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு மனைவியை விட்டு பிரிந்த விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. அதோடு கடன் வாங்கியவர்களிடம் அக்கடனை திருப்பி கொடுக்க முடியாத சூழலிலும் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் விரக்தியில் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தானும் அதே விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது,

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். கடன் தொல்லையாலும், மனைவியை பிரிந்த ஏக்கத்தினாலும் தனது இரு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060