<p style="text-align: justify;">கோவையில் பட்டியலின இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டணையும், இரண்டு பேருக்கு ஆயுள் தண்டணையும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">கோவை ரத்தினபுரி பகுதியில் 2016 ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் பட்டியல் இனத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவரை, அந்த பகுதி இளைஞர்கள் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக பிரசாந்தின் சகோதரர் தாமரை கண்ணன் அப்பகுதி இளைஞர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் தாமரைக் கண்ணன் தங்கி இருந்த அறைக்கு சென்று கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொலை செய்தனர். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த விக்கி என்பவர் உட்பட 14 பேர் மீது கொலை மற்றும் எஸ்.சி, எஸ்.டி வழக்கு உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 14 பேரும் கைது செய்யப்பட்டனர்.</p>
<p style="text-align: justify;">கடந்த 8 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், கோவை எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் இன்று தீர்ப்பு வழங்கினார். 14 பேரில் ஜெயசிங் என்பவர் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> என்பவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். மீதமுள்ள 12 பேரில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இரண்டு பேருக்கு ஆயுள் தண்டணையும் வழங்கி நீதிபதி உத்திரவிட்டார். இதில் தொடர்புடைய விக்கி, மகேந்திரன், கார்த்திக், கவாஸ்கான், சுரேஷ், பிரகாஷ், நவீன், விமல், கௌதம், கலைவாணன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், கிறிஸ்டோபர் மற்றும் கருப்பு கௌதம் ஆகிய இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் தீர்ப்பு வழக்கினார். கோவையில் நடந்த கொலை வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இரண்டு பேருக்கு ஆயுள் தண்டணையும் விதித்து வழங்கப்பட்ட தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>