விழுப்புரம் ; மரக்காணம் மற்றும் புதுச்சேரி கடற்கரையில் திடீரென கடல் நீர் பச்சை நிறத்தில் மாறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி உள்ளனர்.

கடலில் தொடர்ந்து மிகவும் மாற்றங்கள்; அச்சத்தில் மீனவர்கள்

விழுப்புரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த நிலையில் மரக்காணம் கடற்கரைப் பகுதியில் நேற்றைய முன்தினம் கடல் அலைகள் நீல நிறத்தில் ஜொலித்தது. எதனால் கடல் நீல நிறத்தில் ஜொலித்தது என தெரியாமல் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.

டயனோப்ளாஜலேட்ஸ் என்ற பாசி காரணமாக கடல் நீல நிறமாக மாறியிருக்கின்றது. அதாவது, சிறு மீன்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் அந்தப் பாசி, நீலநிற வண்ணத்தை வெளியிடுகிறது. அப்போது ஒளி வெள்ளத்தில், பெரிய மீன்கள் சிறிய மீன்களை தின்றுவிடும். இதனால் இது ஏற்படுகின்றது என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அண்மையில் பெய்த மழையால் கடலில் சேர்ந்த கழிவுகளில் இருந்து நைட்ரஜன் கலந்த பொருட்களில் இருந்து இந்த ஒளி வெளியாகியிருக்கலாம் என கடலோர ஆராய்ச்சி மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. .

பச்சை நிறத்தில் மாறிய கடல் அலைகள்

இன்று கடல் அலைகள் பச்சை நிறத்தில் மாறியதால் கடலுக்கு வந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் கரையோரம் ஆங்காங்கே மீன்கள் பிறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகிறது. இதேபோல் நேற்று புதுச்சேரி கடலின் அலை பச்சை நிறத்தில் மாறத் தொடங்கியது. அப்போது லேசான துர்நாற்றம் வீசியது. புதுவைக்கு வந்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் சிலர் கடலில் குளித்து கொண்டு இருந்தனர். கடல்நீர் மாறத் தொடங்கிய சிறிது நேரத்தில் குளித்துக்கொண்டு இருந்த பொதுமக்களுக்கு உடலில் லேசான அரிப்பு எடுத்தது. உடனே அவர்கள் கரைக்கு திரும்பினர். இதனை பார்த்த பொதுமக்கள் பீதியால் கடலுக்குள் இறங்கவில்லை.

எதனால் கடல் பச்சை நிறத்தில் மாறியது?

ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் வரை தென் கடல் பகுதியில் குறிப்பிட்ட சில நாட்கள் கடலில் உள்ள ‘நாட்டிலூகா’ என்ற அறிவியல் பெயர் கொண்ட கண்ணுக்கு தெரியாத பாசி, தனது மகரந்த சேர்க்கைக்காக கடலில் படரும். அந்த சமயத்தில்தான் கடல்நீர் திடீரென பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். கடல் நீரோட்டம் வேகமாக இருக்கும் போது, கடல்நீர் பச்சை நிறமாக மாறுவது தெரியாது.

அந்த வகை பாசியானது கடல் நீரின் மேற்பரப்பில் படர்ந்து காணப்படுவதால் மீன்களின் செதில்கள் அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் திணறி, இறக்கின்றன. இந்த மாற்றமானது, ஆண்டு தோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் அவ்வப்போது நடப்பது வழக்கம் தான். சில நாட்களில் கடல் நீர் மீண்டும் இயற்கையான நிறத்தை அடையும். கடல் நீர் பச்சையாக இருப்பது 3 நாட்களுக்கு மேல் இருந்தால் கடலில் வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். கடல்நீர் பச்சை நிறமாக மாறியுள்ளதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. ஓரிரு நாட்களில் இயல்பு நிலைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். இதனால் மீனவர்கள் பயப்பட தேவையில்லை. இறந்து கரை ஒதுங்கிய மீன்களில் ஒரா வகையை சேர்ந்த மீன்கள் தான் அதிகம் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.