வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்த நாள் இன்று கோலாகலமாக உலகெங்கும் உள்ள முருகன் ஆலயங்களில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், நாளை வைகாசி மாதத்தில் வரும் பெளர்ணமி வருகிறது. பொதுவாக வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரமும், பெளர்ணமி நாளும் ஒன்றாகவே வரும்.

வைகாசி பெளர்ணமி:

ஆனால், நடப்பாண்டில் வைகாசி விசாகத்திற்கு அடுத்த நாளே பெளர்ணமி வருகிறது. நாளை காலை அதாவது ஜுன் 10ம் தேதி மதியம் 12.27 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் காலை அதாவது நாளை மறுநாள் (ஜுன் 11ம் தேதி) மதியம் 1.53 மணி வரை பெளர்ணமி திதி வருகிறது.

பொதுவாக ஒரு நாளில் சூரிய உதயத்தின்போது இருக்கும் திதியே அந்த நாள் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், பெளர்ணமி தியைப் பொறுத்தமட்டில் மாலையில் சந்திர உதயத்திற்கு பிறகே கணக்கில் கொள்ளப்படும் என்பதால் பெளர்ணமி திதி பிறக்கும் நாளே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

துர்கை அம்மனை வழிபடுவது எப்படி?

நாளை வரும் வைகாசி பெளர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால் செவ்வாய் கிழமையில் வரும் இந்த பெளர்ணமி துர்கை அம்மனுக்கு மிகவும் உகந்த நாளில் வருகிறது. இந்த பெளர்ணமி நன்னாளில் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள், வீட்டில் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைய விரும்புபவர்கள் துர்கை அம்மனுக்கு சிவப்பு நிற பட்டாடை உடுத்தியும், செவ்வரளி சாற்றியும் வழிபடுவது சிறப்பு ஆகும்.

இவ்வாறு வழிபடுவதால் திருமணம் கூடிய சீக்கிரம் கைகூடி வருவதுடன், வீட்டில் வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பதே ஆகும். மேலும், இந்த செவ்வாய் கிழமை முருகப்பெருமானுக்கு உகந்த நாள் என்பதால் முருகனை வணங்கினாலும் விரும்பியவரை திருமணம் செய்யலாம்.

எந்த தெய்வத்தை வணங்குவதால் என்ன நன்மைகள்?

இந்த வைகாசி பெளர்ணமியில் சிவபெருமானை சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்வது சிறப்பு ஆகும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை ஆகும். மேலும், சிவாலயங்களில் விளக்கேற்றுவதால் ஆயுள் அதிகரிக்கும் என்பதும் நம்பிக்கை ஆகும்.

முருகப்பெருமானுக்கு உகந்த இந்த செவ்வாயில் வரும் வைகாசி பெளர்ணமியில் கோயிலுக்கு முருகனை வணங்குவதால் விரும்பியவரை மணம் முடிக்கலாம். வீட்டில் நிலவும் துன்பங்கள் நீங்கி, தானிய மற்றும் செல்வ வளம் உண்டாகும். இந்த பெளர்ணமி நாளில் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்பதும் நம்பிக்கை ஆகும்.

நட்சத்திரங்கள்:

திருமணம் மற்றும் வேலையில் அதிக சிக்கல்களை எதிர்கொண்டு வரும் மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை நட்சத்திரக்காரர்கள் மற்றும் மேஷம், விருச்சிக ராசியினர் வைகாசி பெளர்ணமி நாளில் கோயிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு ஆகும்.