மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் (GRH) அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு அசுத்தமான ஆடைகள் தரப்படுவதாக தொடர் புகார்கள் குவிந்து வருகின்றன. இதன் காரணமாக, காசு கொடுத்து புதிய ஆடைகளை வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக நோயாளிகள் வேதனை தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து, நோயாளிகளுக்கு வேட்டிகள், சட்டைகள் மற்றும் ஸ்கர்ட்களை குறைவான விலையில் விற்க ராஜாஜி அரசு மருத்துவமனை திட்டமிட்டு வருகிறது.

நோயாளிகளுக்கு அழுக்கான டிரஸ் வழங்கப்படுகிறதா?

நாட்டிலேயே சிறந்த மருத்துவ வசதிகளை கொண்ட மாநிலமாக திகழ்வது தமிழ்நாடு. பிற மாநிலங்களில் இருந்து மட்டும் இல்லாமல் பல நாடுகளில் இருந்தும் உயர் சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கான மக்கள் தமிழ்நாட்டை தேடி வருகின்றனர்.

இப்படியிருக்க, மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனை குறித்து புகார்கள் குவிந்து வருகின்றன. அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக வரும் நோயாளிகளுக்கு அசுத்தமான ஆடைகளை தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்போது உடுத்த வேண்டிய ஆடைகளை மருத்துவமனையே வழங்குவது வழக்கம்.

அரசு மருத்துவமனைக்கு எதிராக குவியும் புகார்கள்:

ஆனால், அறுவை சிகிச்சை தொடங்கப்படுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர், எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், வேட்டிகள், சட்டைகள் மற்றும் ஸ்கர்ட்களை வாங்க சொல்லி நோயாளிகளை செவிலியர்கள் கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டை மறுத்த மருத்துவனை அதிகாரிகள், "நோயாளிகள் புதிய ஆடைகளை வாங்குவதற்குப் பதிலாக வீட்டிலிருந்து சுத்தமான ஆடைகளைக் கொண்டு வரலாம். தமிழகம் முழுவதும் உள்ள பல அரசு மருத்துவமனைகள் இதே போன்ற நடைமுறைகளைத்தான் பின்பற்றி வருகின்றன" என்றார்.

கட்டாயப்படுத்தும் செவிலியர்கள்:

இதுகுறித்து பெயர் கூற விரும்பாத நோயாளிகள் கூறுகையில், "அறுவை சிகிச்சைக்கு முன்பும், அறுவை சிகிச்சைக்குப் பிறகும் ஆண்கள் அணிவதற்காக புதிய வெள்ளை வேட்டி, சட்டைகளும் பெண்கள் அணிவதற்காக பாவாடைகளும் வாங்க வேண்டும் என சொல்கின்றனர்.

மருத்துவமனைக்கு அருகிலுள்ள உள்ளூர் கடைகளில் இருந்து பெரும்பாலும் வாங்கப்படும் இந்த ஆடைகள், அவற்றின் விலையை விட அதிகமாக இருக்கிறது. சில நோயாளிகள் ரூ.1,500 வரை செலவிட வேண்டி இருக்கிறது" என்றார்கள்.

நடந்தது என்ன?

இதுகுறித்து இதய நோயாளி முனியம்மாள் கூறுகையில், "தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து நான் இங்கு பரிந்துரைக்கப்பட்டேன். கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, நான் இருதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டேன்.

அறுவை சிகிச்சைக்கான தேதி உறுதி செய்யப்பட்ட பிறகு, செவிலியர்கள் மூன்று செட் வெள்ளை சட்டைகள் மற்றும் பாவாடைகளை வாங்கச் சொன்னார்கள். அறுவை சிகிச்சையின் போது ஒரு செட் அணிய வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள்.

என் மகள் ரூ. 1,500க்கு மூன்று செட்களை வாங்கினார். சிகிச்சை இலவசம் என்றாலும், அறுவை சிகிச்சைக்கு ஒரு நாள் முன்பு செவிலியர்களின் கோரிக்கையால் நாங்கள் எரிச்சலடைந்தோம். இவை குறைந்த விலையில் வழங்கப்பட்டால், அது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

இதுகுறித்து ராஜாஜி அரசு மருத்துவமனையின் ரெசிடென்ட் மருத்துவ அதிகாரி (RMO) எஸ். சரவணன் கூறுகையில், "அறுவை சிகிச்சைக்கு முன்னரோ அல்லது பின்னரோ நாங்கள் யாரையும் துணிகளை வாங்க கட்டாயப்படுத்துவதில்லை.

நோயாளிகள் அணியும் ஆடைகளிலிருந்து தொற்று ஏற்படுவதைத் தவிர்ப்பதே இதன் நோக்கம். நோயாளிகளிடமிருந்து எங்களுக்கு பல புகார்கள் வந்ததால், கோரிக்கையை பரிசீலித்து, மருத்துவமனையில் குறைந்த விலையில் துணிகள் கிடைப்பதை உறுதி செய்வோம்" என்றார்.