கர்நாடகாவில் நேற்று பாலின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இன்று டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, மின்சார கட்டண விலை உயர்வு, பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் பயண கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கர்நாடக தலைநகர் பெங்களூருவில் வாழ முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக அங்கு வசித்து வரும் புலம்பி வருகின்றனர்.

பெங்களூருவில் வாழவே முடியாது போல:

கர்நாடகாவில் தற்போது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. பல்வேறு சமூக நலத்திட்டங்களை அறிவித்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், வாக்குறுதிகளை நிறைவேற்றினாலும் அத்தியாவசிய பொருள்களின் விலையை உயர்த்தி வருவது அம்மாநில மக்களை வெகுவாக பாதித்துள்ளது.

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டு, அது நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதற்கு முன்புதான், மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் பயண கட்டணம் உயர்த்தப்பட்டது.

விலைஉயர்வால் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் வசித்து வரும் மக்கள் ஏற்கனவே பெரும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், தற்போது டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் மீதான விற்பனை வரி 18.4% லிருந்து 21.17% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது இன்று முதலே அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், கர்நாடகாவில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.02 ஆக உயர்ந்துள்ளது.

டீசல் விலை உயர்வு:

டீசல் விலை உயர்வு குறித்து விளக்கம் அளித்த கர்நாடக அரசு, "இந்த விலை உயர்வுக்குப் பிறகும், கர்நாடகாவில் டீசல் விலை அண்டை மாநிலங்களை விடக் குறைவாகவே இருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மற்ற துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. போக்குவரத்துக் கழகங்கள் டீசல் கொள்முதலுக்கு அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

இதுகுறித்து கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், "சமீபத்தில்தான், பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. எனவே, போக்குவரத்து கழகங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்த முடியாது. போக்குவரத்து கழகங்கள் வாங்கும் எரிபொருளுக்கு உயர்த்தப்பட்ட 2 ரூபாயை திரும்பக் கொடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் முறையிட மட்டுமே முடியும்" என்றார்.