கோவை ஆத்துப்பாலம் பகுதியில் அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆத்துப்பாலம் பகுதியில் சிறுவர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. வளைவு பகுதியில் திரும்பியபோது இருசக்கர வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் அது சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வாகனத்தை இயக்கிய சிறுவன் சாலையின் ஓரமாக விழுந்த நிலையில், பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு சிறுவன் பேருந்தின் பின்சக்கரத்திற்கு அருகே விழுந்தார். எதிர்பாராத விதமாக பேருந்தின் பின்சக்கரம் அவரது உடலின் மீது ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது.

விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஓடி வந்து சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், இருசக்கர வாகனங்களை இயக்குவதில் சாலைப் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும் மீண்டும் உணர்த்தியுள்ளது. குறிப்பாக ஓட்டுநர் உரிமம் பெறாத வயதினர்கள் வாகனங்களை இயக்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.