தஞ்சாவூர்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 1,400 தற்காலிக பணியாளர்கள் விரைவில் நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று சம்பா கொள்முதல் குறித்த முன்னேற்பாடு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அவர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: திமுக தேர்தல் வாக்குறுதிபடி நெல்லுக்கான விலை குவிண்டாலுக்கு ரூ.2,500 விலை அறிவித்து விவசாயிகளிக்கு வழங்கப்பட்டு வருகிறது.கடந்த அதிமுக ஆட்சியில் சன்னரகம் ரூ.1,960, பொதுரகம் ரூ.1,945 என்று இருந்தது.

அதே போல், 2007-2008ல் திமுக ஆட்சியில் சன்னரகத்துக்கு ரூ.70, பொதுரகத்துக்கு ரூ.50 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. 2011 முதல் அதிமுக காலத்தில் 1 ரூபாய் கூட ஊக்கத் தொகை தரப்படவில்லை. 2021ல் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் ரூ.100, ரூ.75 ஆக உயர்த்தி, இப்போது சன்னரகம் ரூ.156, பொதுரகம் ரூ.131 என உயர்த்தி வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் 5 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு குறுவை பருவத்தில் 15 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது. 2024ல் 48 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்தாண்டு 58 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள் ஒரே நேரத்தில் அறுவடை செய்வதால் பிற மாவட்டங்களிலிருந்து அறுவை இயந்திரங்கள் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கொள்முதல் நிலையங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏதேனும் முறைகேடுகள் ஏற்பட்டால் விவசாயிகள் புகார் அளிக்கலாம், மேலும் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை எண்ணின் தொலைபேசி எண் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் விளம்பரபடுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் அதுகுறித்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கொள்முதல் பணிக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவரது உத்தரவின்பி பணியாளர்களை தேர்வு செய்வார்கள். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் 1,400 பேர் விரைவில் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.