கும்பகோணம்: இன்றைய வேகமான உலகில், பலரையும் வாட்டும் முக்கியப் பிரச்சினை தூக்கமின்மை. பகல் முழுதும் உழைத்துவிட்டு படுக்கைக்குச் சென்றாலும், பலருக்கு நள்ளிரவு வரை தூக்கம் வராமல் கண்கள் விழித்திருக்கின்றன. இதற்காக மாத்திரைகளை நாடுவதை விட, நமது பாரம்பரிய யோகக் கலையில் உள்ள ஒரு எளிய முத்திரை இதற்கு சிறந்த தீர்வாக அமைகிறது. அதுதான் "சக்தி முத்திரை" .

இந்த முத்திரையை எவ்வாறு செய்வது, அதன் பலன்கள் என்ன என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

சக்தி முத்திரை செய்வது எப்படி?

இந்த முத்திரையை படுக்கையில் அமர்ந்துகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ மிக எளிதாகச் செய்யலாம்.

முதலில் நிதானமாக அமர்ந்து அல்லது படுத்துக்கொண்டு உடலைத் தளர்த்திக் கொள்ளுங்கள்.

உங்கள் இரு கைகளின் பெருவிரல்களையும் உள்ளங்கைக்குள் மடக்கி வைத்துக் கொள்ளவும்.

இப்போது, பெருவிரல்களின் மேல் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரலை மடித்து மூடிக்கொள்ளுங்கள்.

மீதமுள்ள இரு விரல்களான மோதிர விரல் மற்றும் சுண்டு விரலின் நுனிகளை மட்டும் இரு கைகளிலும் ஒன்றோடு ஒன்று தொடுமாறு நேராக நீட்டி வைக்க வேண்டும்.

கைகளை நெஞ்சிற்கு நேராகவோ அல்லது வசதியான நிலையிலோ வைத்துக்கொண்டு, கண்களை மூடி இயல்பான மூச்சுக்காற்றை கவனிக்க வேண்டும்.

எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்?

இந்த முத்திரையை இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு 10 முதல் 12 நிமிடங்களுக்கு முன்பு செய்யத் தொடங்கலாம்.

ஆரம்பத்தில் 10 நிமிடங்கள் செய்துவிட்டு, பின்னர் படிப்படியாக 20 முதல் 30 நிமிடங்கள் வரை நீட்டிக்கலாம்.

தூக்கத்தை வரவழைப்பதில் இதன் அறிவியல் என்ன?

நமது விரல் நுனிகளில் எண்ணற்ற நரம்புப் புள்ளிகள் உள்ளன. சக்தி முத்திரையில் மோதிர விரலும் சுண்டு விரலும் இணையம்போது, அது உடலின் இடுப்புப் பகுதி மற்றும் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் ஆற்றலைத் தூண்டுகிறது.

இது மூளையின் செயல்பாட்டைக் குறைத்து, மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் உடல் தானாகவே தூக்க நிலைக்குத் தயாராகிறது.

சக்தி முத்திரையின் முக்கியப் பலன்கள்

ஆழ்ந்த தூக்கம்: தூக்கமின்மை பிரச்சினையை படிப்படியாக நீக்கி, நிம்மதியான மற்றும் ஆழமான தூக்கத்தைத் தரும்.

மன அமைதி: அன்றாட வேலைகளால் ஏற்படும் மன அழுத்தம், பதற்றம் மற்றும் தேவையற்ற சிந்தனைகளைக் குறைக்கும்.

நரம்பு மண்டல பலம்: உடலின் நரம்பு மண்டலத்தைச் சீரமைத்து, உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியையும் ஓய்வையும் அளிக்கும்.

தசைகள் தளர்வடைதல்: நாள் முழுவதும் இயங்கிய உடலின் தசைகளைத் தளர்த்தி, உடல் வலியைப் போக்க உதவும்.

இந்த முத்திரையைச் செய்யும்போது மொபைல் போன், தொலைக்காட்சி போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, அமைதியான சூழலில் செய்வது முழுமையான பலனைத் தரும். தூக்க மாத்திரைகளுக்கு விடைபெற்று, இயற்கையான முறையில் தூங்க இன்றிரவே இந்த சக்தி முத்திரையை முயற்சித்துப் பாருங்கள்!