"உழைப்பாளி மக்களின் ஆதரவோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலம்பொருந்திய கட்சியாக மாற்றுவோம்" என்று கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.ஏ. பேபி கூறினார்.

பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி

மதுரையில் கடந்த 2-ம் தேதி துவங்கி நேற்று, ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு. இதில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எம்.ஏ. பேபி பேசுகையில், “விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு உழைக்கக்கூடிய இந்த கட்சி ஒரு அசாதாரணமான கட்சி என்பதை நாம் நாட்டிற்கு உணர்த்தினோம். கடினமான காலக் கட்டங்களில் கட்சி எந்தவித பின்னடைவையும் சந்திக்காமல் செயல் படுவதற்கான ஆற்றல் கட்சிக்கு உள்ளது என்பதை நாம் கூட்டு செயல்பாடு மூலமாக உணர்த்தியுள்ளோம். ஆக்கப்பூர்வமான விவாதம் இந்த மாநாடு 'ஒற்றுமை' மற்றும் 'கலந்தாலோசனை' என்ற அடிப்படையில் நடைபெற்றுள்ளது. கட்சியைப் பலப்படுத்துவது குறித்து விரிவான விவாதமும் நாம் எங்கு பலவீனமாக இருக்கிறோம் என்பது குறித்தும் கடந்த 3 ஆண்டுகளில் நமது செயல்பாடுகள் குறித்தும் 'விமர்சனம்', 'சுயவிமர்சனம்' என்ற அடிப்படையில் ஆக்கப்பூர்வமாக விவாதங்களை நடத்தினோம். விவாதத்தின்போது பெரும்பாலான பிரதிநிதிகள் கூர்மையான விமர்சனங்களை முன்வைத்தனர். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தங்களது செயல்பாடுகள் குறித்து 'சுய விமர்சனம்' செய்து கொள்ளவேண்டும் என்று கூறினர்.

போராட வேண்டியுள்ளது

தெளிவான எதிர்கால பாதை எதிர்காலத்திற்கான பாதை தெளிவாக உள்ளது. ஜனநாயக ரீதியாக பல்வேறு இயக்கங்களை நடத்தும் போது நம்முன் பல சவால்கள் உள்ளன. சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு உழைப்பாளி மக்களையும் அணிதிரட்டி, 'அரசியல் சாசனத்தின் மாண்புகள்', 'ஜனநாயகம்', 'மதச்சார்பின்மை' ஆகியவற்றைப் பாதுகாக்கத் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள 'நவ பாசிச போக்கு'களை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நவபாசிச அச்சுறுத்தல் ஆளும் வர்க்கங்களோடு இணைந்து, நரேந்திரமோடி - அமித்ஷா, நாக்பூரில் அமர்ந்துகொண்டுள்ள மோகன் பகவத் ஆகியோர் நாட்டைக் கற்காலத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கின்றனர். இதற்கு அண்மையில் மலையாளத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்- பிரபல திரைக்கலைஞர்கள் நடித்துள்ள 'எம்புரான்' திரைப்படமே சாட்சி. அந்த திரைப்படம் குஜராத் மாநிலத்தில் சங்-பரிவாரங்கள் நடத்திய வன்முறையையும் இனப்படுகொலையையும் குரூமான வன்முறையையும் தோலுரித்துக் காட்டுகிறது என்பதால் அதை பொறுத்துகொள்ள முடியாமல் அந்த படத்தையே தடைசெய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் வலியுறுத்தி வருகிறது.

அமலாக்கத்துறை ரெய்டு

திரைப்படத்துறையினருக்கு மிரட்டல் ஒன்றிய அரசின் தணிக்கைத் துறையின் உரிய தணிக்கைக்கு பிறகே அந்தப் படம் திரைக்கு வந்துள்ளது. அந்த தணிக்கை வாரியத்திலும் ஆர்எஸ்எஸ் பிரதிநிதிகள்தான் அதிகமாக உள்ளனர். ஆனால், நாடு முழுவதும் அந்தத் திரைப்படம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதால் படத்தின் சில காட்சிகளை வெட்டவேண்டும் என்று மிரட்டல் விடுத்தனர். மேலும் அந்த திரைப்படம் தொடர்புடைய அனைவரது வீடுகளிலும் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறையை கொண்டு தொடர்ச்சியாக சோதனைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சுயேச்சையான பலத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது

அச்சுறுத்தலை எதிர்கொள்வோம் 24-ஆவது அகில இந்திய மாநாட்டுக்கான அரசியல் தீர்மானத்தை தயாரிக்கும்போது, நாம் என்ன சொன்னோமோ- அது நாட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் 'நவ பாசிச போக்கு'. அதை ஆளும் வர்க்கம் உழைப்பாளி மக்கள் மீதும் உழைப்பாளி மக்களுக்கு ஆதரவாக செயல்படுவோர் அனைவரின் மீதும் ஏவியுள்ளது. இந்தச் சவாலை நமது கட்சி எதிர்கொள்ளும். 'ஜனநாயகம்', 'மதச்சார்பின்மை', 'மக்கள் ஒற்றுமை'க்கு எழுந்துள்ள இந்த அச்சுறுத்தலை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ள கட்சியின் சுயேச்சையான பலத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. இதுகுறித்தும் இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் கூட்டுச் செயல்பாட்டை அதிகரிப்பது குறித்தும் மாநாட்டில் விரிவாக விவாதித்துள்ளோம்.

ஏன் அணிதிரட்ட முடியவில்லை

அரசியல் கடமை நரேந்திர மோடி அரசு பின்பற்றிவரும், நவீன தாராளயமய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும், மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கான கோரிக்கைகளுக்காகவும் போராடும் அதேவேளையில் இந்துத்துவா, கார்ப்பரேட், மதவாதக் கூட்டணியையும் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இதற்கான அரசியல் கடமை தெளிவாக உள்ளது. உழைப்பாளி மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டிய கடமை செங்கொடி இயக்கத்திற்கு உண்டு. நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பகுதி ஏழை எளிய மக்களை எப்படி பிளவுவாத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன என்பதையும் நமது இயக்கங்களுக்கு பின்னால் அவர்களை பெருமளவில் ஏன் அணிதிரட்ட முடியவில்லை என்பதையும் நாம் மாநாட்டில் ஆழமாக விவாதித்தோம். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மத்திய குழு பின்னர் இதுகுறித்து தீவிரமாக விவாதிக்கும். இதுகுறித்து கட்சியின் மாநிலக் குழுக்களுடனும் விவாதிக்கப்பட்டு 24வது அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் அமல்படுத்தப்படும்” என்றார்