நகர செயலாளரை தடியால் தாக்கி விரட்டிய மாவட்ட செயலாளர்

விழுப்புரத்தில் நலத்திட்ட உதவி வழங்க பணம் கொடுக்காததால் தமிழக வெற்றிக் கழக நகர செயலாளரை தடியால் தாக்கி விரட்டிய மாவட்ட செயலாளர், வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்ட தவெக நிர்வாகிகளிடையே கடந்த சில மாதங்களாக நலத்திட்ட உதவிகள் வழங்குவது, ஆலோசனை கூட்டம் நடத்துவதில் நிர்வாகிகள் மத்தியில் மோதல் போக்கு ஏற்பட்டு வருகின்றன.

6 பேர்மீது போலீசார் வழக்கு பதிவு

மேலும் கட்சியில் பொறுப்புகள் போடுவதற்கு பணம் கேட்பதாகவும், கட்சி தலைமை பெயரை சொல்லி பணம் வசூலிப்பதாக இங்கிருந்த மாவட்ட நிர்வாகிகள் மீது காசோலையை காண்பித்து நிர்வாகிகள் புகார் கூறியிருந்தனர். மேலும் பணம் கொடுக்காதவர்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தன. இது தொடர்பான பஞ்சாயத்து காவல்நிலையம் வரை சென்று பேசி தீர்வு காணப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தற்போது தவெக நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டு 6 பேர்மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் பாங்காங்குளத்தை சேர்ந்தவர் சையத்முபாரக்(38). தவெக மேற்கு நகர செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் சாலாமேடு பகுதியில் நடந்த தவெக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது நலத்திட்ட உதவிக்கு பணம் கொடுக்கவில்லை என்று கூறி மாவட்ட செயலாளர் குஷிமோகன் உள்ளிட்டவர்கள் சையத்முபாரக்கை தடியால் சரமாரியாக தாக்கி விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

இதில் பலத்த காயமடைந்த சையத்முபாரக் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தாலுகா காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சையத்முபாரக் புகார் அளித்தார். அதில், விழுப்புரம் மேற்குநகர தவெக சார்பில் நானே முன்னின்று பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறேன். இந்நிலையில் மாவட்ட செயலாளர் குஷிமோகன்ராஜ் என்பவர் நலத்திட்ட உதவிக்கு பதிலாக தன்னிடம் பணம் கொடுக்க சொல்லி கேட்டார்.

நான் தரமறுத்ததால் முன்விரோதம் ஏற்பட்டு கடந்த 10ம்தேதி முதல் என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக கூறிவந்தார். ஆனால் கட்சி தலைமை என்னை முறைப்படி நீக்கவில்லை. இதனால் சம்பவத்தன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் நான் பங்கேற்க சென்றபோது மாவட்ட செயலாளர் குஷிமோகன்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் தமிழரசன் மற்றும் 4பேர் சேர்ந்து என்னை தடியால் சரமாரியாக தாக்கினர் என புகாரில் கூறியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட செயலாளர் குஷிமோகன்ராஜ் உள்ளிட்ட 6 பேர்மீதும் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்ட தவெகவில் பணம் கொடுக்காததால் நகர செயலாளரை தடியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.