பெங்களூருவில் நடுரோட்டில் இளம்பெண் ஒருவரிடம் அடையாளம் தெரியாத நபர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இம்மாதிரியான சம்பவங்கள் பெருநகரங்களில் நடக்கத்தான் செய்யும் என கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அதற்கு அவர் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற நகரமா பெங்களூரு?

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தெருமுனையில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அத்துமீறிய செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியே குறையாத நிலையில், இதுகுறித்து பேசிய கர்நாடக அமைச்சரின் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இம்மாதிரியான சம்பவங்கள் பெருநகரங்களில் நடக்கத்தான் செய்யும் என அவர் கூறினார்.

"இன்று காலையிலும், பெங்களூரு காவல் ஆணையரிடம் நான் அதையே அறிவுறுத்தினேன். மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக எங்கள் காவல்துறை ஒவ்வொரு நாளும் அயராது உழைத்து வருகிறது. ஆனால் இது போன்ற ஒரு பெரிய நகரத்தில், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்" என கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கூறியிருந்தார்.

அமைச்சரின் சர்ச்சை கருத்து:

இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. "அதிகரித்து வரும் குற்றங்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து அவரும் நிர்வாகமும் நடந்து கொள்ளும் இரக்கமற்ற விதத்தை உள்துறை அமைச்சரின் கருத்து பிரதிபலிக்கிறது" என கர்நாடக பாஜக தலைவர் பி. ஒய். விஜயேந்திரா விமர்சித்தார்.

தன்னுடைய கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அமைச்சர் பரமேஸ்வரா மன்னிப்பு கேட்டுள்ளார். "நேற்று நான் கூறிய கருத்தை சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பெண்களின் பாதுகாப்பில் நான் எப்போதும் மிகுந்த அக்கறை கொண்டவன்.

நிர்பயா நிதி பெண்களின் பாதுகாப்பிற்காக சிறப்பாகப் பயன்படுத்தப்படுவதை நான் உறுதி செய்துள்ளேன். எனது கருத்தை திரிபுபடுத்தப்படுவதை நான் விரும்பவில்லை. எனது கருத்தால் யாராவது புண்பட்டிருந்தால் நான் வருத்தத்தையும் மன்னிப்பும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ வைரலானதை அடுத்து, தாக்குதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அந்தப் பெண், இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை.