தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால் போலீஸ் ஸ்டேஷன் முன்பு விஷம் குடித்து தங்கை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் தலைமையிலான குழுவினர் இன்று விசாரணை மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரி அரச மரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் அய்யா தினேஷ் (32). கடந்த ஏப்.8ம் தேதி நடுக்காவேரி போலீசார் இவர், பொது இடத்தில் கத்தியைக்காட்டி மிரட்டியதாக கூறி கைது செய்தனர். ஆனால் தங்களின் அண்ணன் மீது நடுக்காவேரி போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர் என்று கூறி, அய்யா தினேஷின் தங்கைகளான மேனகா (31), கீர்த்திகா (29) கடந்த ஏப்.8ம் தேதி மாலை நடுக்காவேரி போலீஸ் ஸ்டேஷன் முன்பு களைக்கொல்லி மருந்தைக் குடித்தனர்.

இதையடுத்து, இருவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், பொறியியல் பட்டதாரியான கீர்த்திகா மறுநாள் ஏப். 9 ஆம் தேதி உயிரிழந்தார். மேனகா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் சர்மிளா ஏப்.11 ஆம் தேதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமைக் காவலர் ஆகியோர் 16ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

தவிர தற்கொலைக்கு தூண்டுதல், எஸ்.சி., எஸ்.டி .வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் மாற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, ஆய்வாளர் சர்மிளா உள்பட 4 காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கீர்த்திகாவின் உடலை வாங்க மறுத்து நடுக்காவேரி அரச மரத் தெருவில் தொடர்ந்து 8வது நாளாக இன்றும் (17ம் தேதி) உறவினர்கள் உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் டாக்டர் ரவிவர்மா தலைமையிலான குழுவினர் நேற்று நடுக்காவேரிக்குச் சென்று கீர்த்திகாவின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேனகாவிடமும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இதுதொடர்பான அறிக்கையைத் தலைமையிடத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் ரவிவர்மா தெரிவித்தார்.