சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், சிஎஸ்கே அதை விட மோசமாக ஆடி ரசிகர்களை மீண்டும் ஏமாற்றியது. இறுதியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை சென்னை அணி இழந்துள்ளது.

தோல்விக்கு போட்டி போட்ட சிஎஸ்கே:

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்து பிளே-ஆஃப் சுற்றுக்குள் முன்னேற 10 அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையே, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடர்ந்து சொதப்பும் சென்னை அணி பேட்ஸ்மேன்கள் இன்றைய போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டேவால்ட் பிரேவிஸ் மட்டும் அதிரடியாக விளையாடி 42 ரன்கள் எடுத்தார்.

மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். இதனால், 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து சென்னை அணி 154 ரன்களை எடுத்தது. இதன் மூலம், 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

சுமாராக ஆடிய ஹைதராபாத்:

ஹைதராபாத் அணியும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இஷான் கிஷன் மட்டும் சிறப்பாக ஆடி 44 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்பினர். இதன் காரணமாக, 155 ரன்கள் என்ற எளிதான இலக்கை ஹைதராபாத் அணி போராடி எடுக்க நேரிட்டது. 18.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. இதன் காரணமாக, பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை சென்னை அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இழந்துள்ளது.

வழக்கத்திற்கு மாறாக சென்னை அணி நடப்பு தொடரில் மோசமாக விளையாடி வருகிறது. சென்னை அணியில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மாற்று வீரர்கள் கூட வலுவாக இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. கேப்டனாக தோனி மீண்டும் பொறுப்பேற்ற பிறகும் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.