சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அரசியல் களம் மற்றும் தனது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து சுருக்கமாக,பதிலளித்துச் சென்றார்.

தமிழக தேர்தல் களம்:

இந்த மாத இறுதியில் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும், தேர்தலுக்காக தயாராகி வருகின்றன. திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணிகளை உறுதி செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக எதிரும் புதிரமாக இருந்த அதிமுக மற்றும் அமமுக இரண்டு கட்சிகளும் தற்போது இணைந்திருக்கின்றன. இதனால் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக உரிமை மீட்பு கழகத்தை நடத்தி வரும், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டணி குறித்து என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்தபோது முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு

மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ஓ. பன்னீர் செல்வம், தை மாதம் முடிவதற்கு இன்னும் 9,நாட்கள் உள்ளன. அதேபோல், தேர்தக்கு இன்னும் 3 மாத கால அவகாசம் இருக்கிறது," என்று குறிப்பிட்டார். இதன் மூலம் தேர்தல் அரசியலில் இன்னும் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதை அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.

ஓ.பி.எஸ்.அவர்கள் தனிக்கட்சி தொடங்குவாரா? திமுக அல்லது தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளுடன் இணைவாரா? எனச் செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்க்கு "எந்த ஓ.பி.எஸ்?" என்று புன்னகையுடன் எதிர்க்கேள்வி கேட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.அவரது இந்த பதில் அங்கிருந்தவர்களிடையே சலசலப்பையும், ஏற்படுத்தியது.

ஓபிஎஸ் எடுக்க போக முடிவு என்ன ?

அதிமுகவில் ஓபிஎஸ் இணைக்க முடியாது எனத் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி திட்ட வட்டமாக தெரிவித்து வருகிறார். இந்தநிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவுகள் அடைக்கப்பட்டதால், திமுக அல்லது தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணிக்கு செல்ல ஓபிஎஸ்-க்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்களும், திமுக, அதிமுக மற்றும் தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு தாவி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.