தமிழகத்தில் பாதுகாப்பு குறைவு, மக்கள் மாற்றம் விரும்புகின்றனர் – மேட்டுப்பாளையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் முகாம் அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்து தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் பல இடங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், இதனால் சமூகத்தில் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு குறைவாக உணருகின்றனர் என்றும் தெரிவித்தார். சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து மாநில அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

விளாத்திகுளம் பகுதியில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், கொங்கு மண்டலத்தில் முதிய தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவம், நாங்குநேரி பகுதியில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்கள் நடந்ததாக வெளியான தகவல்கள் போன்றவை பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த சில ஆண்டுகளில் குடிநீர் கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்டதால் மக்கள் பொருளாதார சுமையை சந்தித்து வருவதாகவும், இதனால் அரசின் செயல்பாடுகள் மீது அதிருப்தி அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மக்கள் மாற்றத்தை விரும்பி வருவதாகவும், வரவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.